இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்; வங்காளதேச பிரதமரின் உறவினரான 8 வயது சிறுவன் உயிரிழப்பு

இலங்கையின் கொழும்பு நகரில் கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில், கொழும்பு நகரின் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மீது அன்று காலை 8.45 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  இதேபோன்று மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீதும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன.
இந்த தாக்குதல்களில் இதுவரை 321 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  500 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.
இதில், வங்காளதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் பஸ்லுல் கரீம் செலிம் என்பவரின் பேரன் ஜயான் சவுத்ரி (வயது 8) கொல்லப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.  ஜயான் தனது தந்தை ஹேக் சவுத்ரியுடன் கொழும்பு நகரில் உள்ள ஆடம்பர ஓட்டலின் தரை தளத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தபொழுது குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது.
ஜயானின் உடல் நாளை டாக்கா நகருக்கு கொண்டு செல்லப்படும்.  இந்த தாக்குதல் சம்பவம் நடந்தபொழுது, அவனது இளைய சகோதரன் ஜோஹான் சவுத்ரி மற்றும் தாயார் ஷேக் அமீனா ஆகியோர் ஓட்டல் அறையில் இருந்துள்ளனர்.
செலிம், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் உறவினராவார்.  செலிமின் மருமகன் மஷியுல் இலங்கை மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.  அவரது நிலைமை தொடர்ந்து மோசமடைந்த நிலையிலேயே உள்ளது.  72 மணிநேரத்திற்கு பின்பே அவரது நிலை தெரிய வரும்.