- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், சமீபத்திய அரசியல் நிகழ்வுகளில் பிரதமராக நியமிக்கப்பட்டு, பதவி விலக நேர்ந்தவருமான மஹிந்த ராஜபக்ஷ தற்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அரசியலில் அதிரடித் திருப்பமாக, கடந்த அக்டோபர் 26-ம் தேதி பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க-வை அந்தப் பதவியில் இருந்து அகற்றிவிட்டு தமது எதிர்த் தரப்பில் இருந்துவந்த முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
அதன் பிறகு நடந்த பரபரப்பான அரசியல் நிகழ்வுகளின் முடிவில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்ஷவால் முடியவில்லை. இதையடுத்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.
இந்நிலையில் இன்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தார் சபாநாயகர் கரு.ஜெயசூர்ய.
இலங்கையில் அக்டோபரில் நடந்த அரசியல் திருப்பத்துக்கு முன்பு இலங்கை சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்திருந்தன.
இலங்கையின் எதிரெதிரான இரு பெரும் அரசியல் தரப்பும் ஓரணியில் இருந்ததால், 16 எம்.பி.க்களைப் பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டணி எதிர்க் கட்சி அந்தஸ்தைப் பெற்றிருந்தது.
இப்போது ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியை, பிரதமர் பதவியை கைப்பற்றிவிட்டாலும், அது முன்பு போல ராஜபக்ஷ, மைத்ரிபால ஆகியோர் இடம் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அவர்களுடன் கூட்டணியில் இல்லை. எனவே, அந்தக் கூட்டமைப்பு எதிர்க் கட்சி வரிசையில் உள்ளது.
அரசியல் திருப்பங்களுக்கு முன்பு இந்தக் கூட்டமைப்புக்கு 96 எம்.பி.க்கள் இருந்தனர். அரசியல் குழப்பங்களின்போது இவர்களில் 6 பேர் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டனர்.
எனினும் இந்தத் தரப்புக்கு 90 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதால் ராஜபக்ஷே-வை எதிர்க் கட்சித் தலைவராக சபாநாயகர் அறிவித்தார். முன்பு எதிர்க்கட்சியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 16 எம்.பி.க்கள் ஆதரவு இருந்தது.
அவர்களில் வியாழேந்திரன் ராஜபக்ஷ தரப்புக்கு சென்ற நிலையில் 15 எம்.பி.க்கள் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளனர்.
மகிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எதிர்ப்பு வெளியிட்டார்.
”நாடாளுமன்றில் அங்கததுவம் இல்லாத கட்சி ஒன்றின் உறுப்பினர்களை நாடாளுமன்ற அமர்வில் அனுமதிக்கக் கூடாது. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற அங்கத்துவம் கொண்ட கட்சி அல்ல.
எனவே அதன் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட வேண்டும். ஜனாதிபதி, அமைச்சுப் பதவிகளை வகித்தால் அவர் தலைமைத்துவம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பின் ஆளும் கட்சியில் பங்காளி ஆகிறது. எனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வழங்க முடியாது.” என எம்.ஏ.சுமந்திரன் வாதிட்டார்.
இதனைக் கேட்டுக்கொண்டிருந்த சபாநாயகர், இதனை எழுத்துமூலம் அறிவிக்குமாறும், இதுகுறித்து வரும் வெள்ளிக்கிழமை அறிவிப்பதாகவும் கூறியதாக எம்.ஏ.சுமந்திரன் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மிகப்பெரிய கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சியில் முன்பு இருந்து வந்த மஹிந்த ராஜபக்ஷே, கட்சிக்குள் ஆதரவு குறைந்த காலத்தில் பொதுஜன பெரமுன என்ற தனி அரசியல் அமைப்பைத் தொடங்கினார். இப்போது அவர் அந்த அமைப்பின் உறுப்பினராக இருப்பதாலும், அந்தக் கட்சிக்கு போதிய பலம் இல்லை என்பதாலும் அவரை எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்கக் கூடாது என்று நாடாளுமன்றத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் ஆட்சேபனை தெரிவித்தார்.
ஆனால், எதிர்க் கட்சி உறுப்பினர்களின் தேர்வான ராஜபக்ஷவை எதிர்க் கட்சித் தலைவராக அறிவித்தார் சபாநாயகர் கரு.ஜெயசூர்ய.