இலங்கை இந்து ஆலய வளாகத்தில் பௌத்த பிக்கு உடல் தகனம் – முல்லைத் தீவில் பதற்றம்

முல்லைத்தீவு – நீராவியடி பிள்ளையார் ஆலயம் மற்றும் பௌத்த விஹாரை வளாகத்தில் இறுதிக் கிரியைகளை செய்யக்கூடாது என நீதிமன்றத்தினால் வழக்கப்பட்ட உத்தரவை மீறி, நீராவியடி ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி கொழும்பு தம்மாலங்காரகீர்த்தி தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று நடத்தப்பட்டன.

பௌத்த பிக்குகளின் தீர்மானத்திற்கு அமைய விஹாரை வளாகத்தில் இந்த இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவிக்கிறார்.

முல்லைத்தீவு நீராவியடி குருகந்த ரஜமஹா பௌத்த விஹாரையின் விஹாராதிபதி கொழும்பு தம்மாலங்காரகீர்த்தி தேரர், புற்று நோய் காரணமாக நேற்று முன்தினம் (21) உயிரிழந்தார்.

அவரது உடலை விஹாரையில் தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை விஹாரை நிர்வாகத்தினர் முன்னெடுத்தனர்.

எனினும், நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள காணியிலேயே பௌத்த விஹாரை அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஏற்கனவே சர்ச்சை இருந்து வந்த பின்னணியில், உடலை அந்த இடத்தில் தகனம் செய்ய ஆலய நிர்வாகத்தினர் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதையடுத்து, இந்த விடயம் தொடர்பில் பிள்ளையார் ஆலய நிர்வாக சபை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் (21) இரவு முறைப்பாடொன்றை பதிவு செய்தது.

பௌத்த பிக்குவின் பூதவுடலை இந்து ஆலய வளாகத்தில் தகனம் செய்வதானது, இந்து மதத்தை அவமதிக்கும் செயற்பாடு எனவும், அவ்வாறு தகனம் செய்தால் முல்லைத்தீவில் அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்த விடயங்களை கருத்திற் கொண்டு, பௌத்த பிக்குவின் உடலை வேறொரு இடத்தில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரியே ஆலய நிர்வாகம் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தது.

இந்த நிலையில், முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு பதில் நீதவான் முன்னிலையில் நேற்றைய தினம் இந்த சம்பவம் தொடர்பில் விடயங்களை தெளிவூட்டியிருந்தனர்.

விடயங்களை ஆராய்ந்த நீதவான், பிக்குவின் உடலை இன்று வரை (23) தகனம் செய்யவோ, புதைக்கவோ கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இன்றைய தினம் காலை இரண்டு தரப்பையும் நீதிமன்றத்திற்கு அழைத்து விடயங்களை ஆராய்ந்ததன் பின்னர் தீர்ப்பொன்றை வழங்குவதாகவும் நீதவான் நேற்றைய தினம் கூறியிருந்தார்.

இதையடுத்து, கொழும்பிலிருந்து பொதுபல சேனா அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பௌத்த பிக்குகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்றைய தினம் சென்றிருந்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதவான், பிக்குவின் உடலை, இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை மீறிய பௌத்த பிக்குகள், உயிரிழந்த பிக்குவிற்கு பௌத்த முறைப்படி இறுதி சடங்குகளை செய்து, ஆலய வளாகத்தில் தகனம் செய்ய தீர்மானித்தனர்.

இந்த தீர்மானத்தை அடுத்து குறித்த பகுதியில் பல மணி நேரம் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததுடன், பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

இந்துக்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து பல்வேறு விதமான போராட்டங்களை செய்த போதிலும், ஆலய வளாகத்தில் அமைந்துள்ள தீர்த்தக்கேணிக்கு அருகில் பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை மீறி இந்த இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டதாக ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும், நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய, பிக்குவின் உடலுக்கு இறுதிக் கிரியை செய்வற்கு தமக்கு இணக்கம் கிடையாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவிக்கிறார்.

பௌத்த பிக்குகள் சபையின் தீர்மானத்திற்கு அமைய எந்தவித பிரச்சினைகளும் இன்றி தேரரின் இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.