- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
- உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை
- பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை
- நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
- ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

இலங்கை அரசைக் கவிழ்க்க முடியுமா? ராஜபட்சவுக்கு ரணில் சவால்
இலங்கை அரசை முடிந்தால் கவிழ்த்துப் பார்க்கட்டும் என்று ராஜபட்சவுக்கு அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சவால் விடுத்துள்ளார். தாம் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒரு வார காலத்தில் ராஜபட்ச அதை செய்து முடிக்கிறாரா? என்பதை பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசுக்கு எதிரான போராட்டங்களை அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபட்ச முன்னெடுத்து வருகிறார். இலங்கை விடுதலைக் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அரசியல் பிரவேசம் செய்ய இத்தகைய நடவடிக்கைகளில் ராஜபட்ச ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக, இலங்கை – சீனா இடையே மேற்கொள்ளப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டல ஒப்பந்தத்தின் சில அம்சங்களுக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்துக்காக அம்பணத்தோட்டம் பகுதி மக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக ராஜபட்ச போராட்டம் நடத்தி வருகிறார்.
இதுதொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்த அவர், மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசை நிகழாண்டுக்குள் கவிழ்க்கப் போவதாகக் கூறினார். இந்நிலையில், கொழும்பில் திங்கள்கிழமை (ஜன. 2) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இதுகுறித்து கூறியதாவது: அம்பணத்தோட்டம் பகுதியில் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான வரைவுத் திட்ட ஒப்பந்தத்தில் இலங்கையும், சீனாவும் கையொப்பமிட்டுள்ளன.
அதுமட்டுமன்றி, இரு நாடுகளுக்கும் இடையேயான வரி விதிப்புச் சலுகை தொடர்பான ஒப்பந்தத்துக்கு தற்போது இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதுவும் கையெழுத்தாகும்.
மீண்டும் அரசியலுக்கு வருவதற்காக ராஜபட்ச பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அடுத்த வாரம் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு 7 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். அந்த அவகாசத்தை ராஜபட்சவுக்கு வழங்குகிறேன். அதற்குள் முடிந்தால் அவர் ஆட்சியைக் கலைத்துப் பார்க்கட்டும் என்றார் அவர்.