இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா போட்டி இல்லை – கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு தருகிறார்

அதிபர் சிறிசேனா வின் பதவிக்காலம் முடிகிறது. இதையடுத்து அங்கு அடுத்த மாதம் 16-ந் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் அவரது தம்பி கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். இவர் எதிர்க்கட்சிகளின் முக்கிய வேட்பாளராக களம் இறங்கி உள்ளார்.

இவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பிரதமர் ரனில் விக்ரம சிங்கே போட்டியிட விரும்பினார். இதே போன்று நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியாவும் களம் இறங்க விருப்பம் கொண்டார்.

ஆனால், கட்சியில் பெரும்பாலோர் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டினர். இதையடுத்து அவர் வேட்பாளராக ஒருமனதாக அறிவிக்கப்பட்டார்.

இதுவரை அதிபர் தேர்தலில் போட்டியிட 41 வேட்பாளர்கள் டெபாசிட் தொகை செலுத்தி உள்ளனர். இன்று (திங்கட்கிழமை) நண்பகல் வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் 41 பேர் போட்டியிடுவதற்கு டெபாசிட் தொகை செலுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் சிறிசேனா போட்டியிடுவாரா என்பதில் உறுதியற்ற நிலை நிலவி வந்தது.

நேற்று முன்தினம் இரவு அவர் மகிந்த ராஜபக்சேயை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர் ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சேவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

இதன்மூலம் அதிபர் தேர்தலில் சிறிசேனா போட்டியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

1982-ம் ஆண்டுக்கு பிறகு பதவியில் உள்ள அதிபர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகிய முக்கிய தலைவர்கள் போட்டியிடாமல் இலங்கையில் அதிபர் தேர்தல் நடப்பது இதுவே முதல் முறை ஆகும்.

அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரம சிங்கே, எதிர்க் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் வெவ்வேறு காரணங்களுக்காக அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 41 வேட்பாளர்கள் டெபாசிட் செய்து இருந்தாலும், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கும், கோத்தபய ராஜபக்சேவுக்கும் இடையேதான் முக்கிய போட்டி நிலவுகிறது.

இருப்பினும் முன்னாள் ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகே, தமிழர் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கமும் அதிபர் தேர்தலில் கவனத்தை கவர்கின்றனர்.

அடுத்த மாதம் 16-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும் நிலையில், 12-ந் தேதி வரை அதிபர் தேர்தலில் பிரசாரம் களைகட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.