இலங்கை அதிபர் சிறிசேனா மரணம் அடைவார் என்று கூறிய ஜோதிடர் கைது

கொழும்பு,
இலங்கை அதிபர் சிறிசேனா, ஜனவரி 26-ந் தேதிக்குள் மரணம் அடைந்து விடுவார் என்று இலங்கை ஜோதிடர் விஜிதா ரோகணா விஜேமுனி என்பவர் கணித்து இருந்தார். இதை அவரே பேசி, வீடியோவாக பதிவு செய்து, தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதுதொடர்பாக, இலங்கை ஊடகம் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சக செயலாளர் நிமல் போபகே போலீசில் புகார் செய்தார். சிறிசேனாவை கொலை செய்யும் சதியாக இது இருக்கலாம் என்று அவர் புகாரில் தெரிவித்தார்.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, ஜோதிடர் விஜேமுனியை குற்ற புலனாய்வு போலீசார் கைது செய்தனர். மக்களை திசைதிருப்ப முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விஜேமுனி, இலங்கை கடற்படை வீரராக பணியாற்றியவர். கடந்த 1987-ம் ஆண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி சென்றிருந்தபோது, அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்க நின்று கொண்டிருந்த விஜேமுனி, திடீரென துப்பாக்கியால் ராஜீவ் காந்தியை அடிக்க முயன்றார். ராஜீவ் காந்தி லாவகமாக விலகியதால் தப்பினார். இச்சம்பவத்தால், விஜேமுனி மீது ராணுவ கோர்ட்டு விசாரணை நடைபெற்று சிறைதண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலம் முடிந்த பிறகு, அவர் ஜோதிடர் ஆகிவிட்டார். தற்போது, கைதாகி உள்ளார்.