இலங்கையில் 1800 மில்லியன் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டது

கொழும்பின் புறநகர் பகுதியான மொறட்டுவை பகுதியிலிருந்து சுமார் 1800 மில்லியன் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

போலிஸ் விசேட அதிரடி படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இந்த ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

மொறட்டுவை – ராவதாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றை சோதனைக்கு உட்படுத்திய சமயத்தில் இந்த ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சுமார் 150 கிலோகிராமிற்கும் அதிக எடையை கொண்ட ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், குறித்த வீட்டிலிருந்து ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படுகின்ற 3000கும் அதிகமான துப்பாக்கி ரவைகளும், கைத்துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹெராயின்

பேலியகொடை குற்றத் தடுப்பு பிரிவினரால் கடந்த 4ஆம் திகதி கைது செய்யப்பட்ட கெலும் இந்திக்க சம்பத் என்ற நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் 500 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியை கொண்ட மாணிக்கக்கல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டிருந்தது.

பன்னிபிட்டிய – அரவ்வாவல பகுதியிலுள்ள மாணிக்கக்கல் வர்த்தகரொருவரின் வீட்டிலிருந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி இந்த மாணிக்கக்கல் கொள்ளையிடப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் பேலியகொடை குற்றத் தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணைகளின் ஊடாகவே கெலும் இந்திக்க சம்பத் கைது செய்யப்பட்டு, மாணிக்கக்கல் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த நபரிடம் தொடர்ந்தும் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, அவர் தங்கியிருந்ததாக கூறப்படும் மொறட்டுவை பகுதியிலுள்ள வீட்டிலிருந்தே இன்றைய தினம் ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்ததாக போலிஸார் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலிஸார் கூறுகின்றனர்.

ஹெராயின்

இதேவேளை, கொழும்பு – கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றின் வாகன தரிப்பிடத்திலிருந்து கடந்த மாதம் 23ஆம் திகதி 2945 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெராயின் கைப்பற்றப்பட்டிருந்தது.

இரண்டு வேன்களில் சுமார் 294 கிலோகிராம் எடையுடைய ஹெரோயின் தொகைகள், இரண்டு பயண பொதிகளிலிருந்து போலிஸாரினால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் அன்றைய தினம் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு – கொள்ளுபிட்டி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி நடத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போது, 95.88 கிலோகிராம் எடையுடைய 1100 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றபட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை போலிஸார் தெரிவிக்கின்றனர்.