இலங்கையில் வெங்காய விலை 1 கிலோ ரூ.750 !!

இலங்கையில் என்றும் இல்லாத அளவிற்கு வெங்காயத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

கொழும்பு மொத்த சந்தை நிலவரத்தின்படி, பெரிய வெங்காயம் ஒரு கிலோ 125 இலங்கை ரூபாய் முதல் 150 இலங்கை ரூபாய் வரை விற்கப்படுகின்ற அதேவேளை, சின்ன வெங்காயம் ஒரு கிலோ மொத்த விலை 550 இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 215 ரூபாய்) முதல் 650 இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 255 ரூபாய்) வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமின் சில்லறை விலை 200 இலங்கை ரூபாய் முதல் 300 இலங்கை ரூபாய் வரையும், சின்ன வெங்காயம் ஒரு கிலோகிராமின் சில்லறை விலை 700 இலங்கை ரூபாய் முதல் 750 இலங்கை ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் போன்ற பகுதிகளிலேயே வெங்காய உற்பத்தி இடம்பெற்று வருகின்ற பின்னணியில், அது உள்நாட்டு தேவைக்கு போதுமானதாக அமையாது.

இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்தே மேலதிக தேவைக்கான வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவது வழக்கமானது.

எனினும், இந்தியாவில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு நிலவுகின்றமையினால், இந்தியாவிலிருந்து இதுவரை காலம் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காய இறக்குமதி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் வெங்காய தேவையின் பெருமளவு பகுதியை, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயமே நிவர்த்தி செய்கின்ற நிலையிலேயே இந்தியாவின் இறக்குமதி தடையாகியுள்ளமையினால் இலங்கையில் வெங்காயத்திற்கான தட்டுப்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது.