இலங்கையில் மீண்டும் ஊரடங்கு கலவரத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது

இலங்கையில் முஸ்லிம்களின் கடை, வீடுகளை அடித்து நொறுக்கிய, 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும், மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடான, இலங்கையில், சமீபத்தில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில், தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில், 258 பேர் பலியாகினர். 500 பேர் காயம் அடைந்தனர்.இந்த சம்பவத்துக்கு பின், இலங்கையில் இயல்பு நிலை திரும்பியது.இந்நிலையில், சமூக வலைத்தளங்களில், வதந்திகள் பரவத் துவங்கின. இதையடுத்து, இலங்கையின் வடமேற்கு பகுதியில், இரு தரப்பினருக்கு இடையே கலவரம் ஏற்பட்டது. முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் அடித்து நொறுக்கப் பட்டன.

பதற்றமான சூழல் ஏற்பட்டதால், சில நகரங்களில், நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று காலை, ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.ஆனால், மீண்டும், இருதரப்பினரிடையே மோதல் துவங்கி உள்ளது. கொட்டாரமல்லா என்ற இடத்தில், அமீர், 45, என்பவர், கலவரக்காரர்களால் கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, பல பகுதிகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி, முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய, 100 பேரை கைது செய்துள்ளனர். நாடு முழுவதும், மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.ராணுவ தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கலவரக்காரர்கள் ஒரு கடையை அடித்து நொறுக்குவதை, ராணுவ உடையில் இருக்கும் ஒருவர் வேடிக்கை பார்க்கும் வீடியோ கிடைத்துள்ளது. அதுபற்றிய விசாரணை துவக்கப்பட்டுள்ளது’ என, கூறப்பட்டுள்ளது