இலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்

இலங்கையில் 36 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை அவர்களின் பற்றாளர்களும் இலங்கை தமிழர்கள் பலரும் நினைவுகூரும் மாவீரர் தினம் புதன்கிழமை (நவம்பர் 27) இலங்கையிலும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் தமிழர் தொடர்புடைய கட்சியினராலும் அனுசரிக்கப்பட்டது.

இலங்கை ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர் துறந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் உள்ளிட்ட போராளிகளுக்காக இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் தடை விதித்திருந்தன.

கடந்த காலங்களில் மாவீரர் தினம் நினைவேந்தல் நிகழ்வாக அனுஷ்டிக்கப்பட்ட போதிலும், இந்த ஆண்டு அரசாங்கத்தினாலும், நீதிமன்றங்களினாலும் இந்த நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்பட்டிருந்ததுடன், வடக்கில் இன்று பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதனாலும், மாவீரர் நினைவேந்தல் தினத்தை அனுஷ்டித்தல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதனாலும், மாவீரர் நினைவேந்தல் தினத்தை அனுஷ்டிக்க அரசாங்கத்தினால் மறுப்பு தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அதற்கு தடை விதித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவியேற்ற முதலாவது ஆண்டு, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வை செய்ய கெடுபிடிக்கள் விதிக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில், இந்த ஆண்டு ராணுவ கெடுபிடிகள் கடுமையாக்கப்பட்ட நிலையில், மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தியிருந்தனர்.

மக்கள் ஒன்று திரண்டு, மாவீரர் நினைவேந்தல் தின நிகழ்வுகளை செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில், தமிழ்; அரசியல்வாதிகள், மாவீரர்களின் உறவினர்கள் என தமிழர் தாயகத்திலுள்ள பெரும்பாலானோர் இன்று மாலை மாவீரர் நினைவேந்தல் தினத்தை தமது வீடுகள் மற்றும் தமது அலுவலகங்களில் அனுஷ்டித்திருநதனர்.

தமிழர் தாயகம் முழுவதும் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்த பின்னணியிலேயே, மாவீரர் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.