இலங்கையில் நள்ளிரவில் வெளியிடப்பட்ட அமைச்சரவை விவரங்கள்

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சார்பான அமைச்சரவை உருவாக்கப்பட்டு ஒன்பது நாட்கள் கடந்த நிலையில், நீண்ட இழுத்தடிப்புக்குப் பின்னர், அமைச்சர்களுக்கான கடமைகள் மற்றும் அமைச்சுக்களின் கீழ் வரும் நிறுவனங்கள் போன்றவற்றினை தெரியப்படுத்தும், விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 20ஆம் தேதி, 29 பேரைக் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்ட போதிலும், அவர்களுக்கான கடமைகள், விடயதானங்கள் மற்றும் அவரவருக்குரிய அமைச்சுக்களின் கீழ்வரும் நிறுவனங்கள் ஆகிய விபரங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் வரை வெளியிடப்படவில்லை.

அமைச்சர்களுக்கான கடமைகள், விடயதானங்கள் மற்றும் அமைச்சுக்களின் கீழ்வரும் நிறுவனங்கள் ஆகிய விபரங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியே வெளியிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, 20ஆம் தேதி அமைச்சரவை அமைக்கப்பட்ட போதிலும், ஒவ்வொரு அமைச்சுக்களின் கீழும், என்னென்ன நிறுவனங்கள் வரும் என்பது பற்றி அறிவிக்கப்படாமையினால், அமைச்சர்கள் தமது கடமைகளை மேற்கொள்ள முடியாத நிலைக்கு உள்ளாகி வந்தனர்.

இவ்வாறானதொரு நிலையில்தான், 28ஆம் தேதியிடப்பட்டு, நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், ஒவ்வொரு அமைச்சின் கீழும் வருகின்ற நிறுவனங்கள் எவை என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்படி வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், முப்படைகள், பொலிஸ் திணைக்களம் மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் ஆகியவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு, ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது குடும்பத்தினருடன் தாய்லாந்துக்கு தனிப்பட்ட பயணமொன்றினை மேற்கொண்டிருக்கும் நிலையில், மேற்படி வர்த்தமானி அறிவித்தலை அவர் வெளியிட்டிருக்கின்றார்.

ரணில் விக்ரமசிங்க தரப்பினருடனான முரண்பாடு காரணமாகவே, மேற்படி வர்த்தமானியை வெளியிடுவதில் ஜனாதிபதி இழுத்தடிப்புச் செய்து வந்ததாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.