இலங்கையில் தொடரும் மோதல்

குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிபொல மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிகளுக்கு உடன் அமலுக்குவரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்குச் சட்டம் நாளை அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிபொல மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிகளில் நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மையினால் பல சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தவும் தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

இந்த நிலையில், குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்தும் அமைதியின்மை ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக தெரிவித்து, மீண்டும் உடன் செயலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.

இதேவேளை, சமூக வலைத்தளத்தில் இனங்களுக்கு இடையில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பதிவொன்று இட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலாபத்தில் நேற்று அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், அங்கு ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.