இலங்கையில் தொடரும் “இணக்கமற்ற”தன்மைக்கிடையில் தமிழர் தரப்பு போராடுகின்றது.

இலங்கையில் மைத்திரி பால சிறிசேனாவின் அரசாங்கத்திற்கு எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வழங்கிய நிபந்தனைகள் அற்ற ஆதரவின் பலா பலன்களை எமது சமூகம் சாதகமற்ற விதமாகவே அனுபவித்துள்ளது. இந்த விடயத்தை சாதாரண அரசியல் பார்வையற்ற தமிழ் மக்கள் கூட புரிந்துகொள்வார்கள்.
இவ்வாறு இருந்தும் தமிழர் தரப்பு தொடர்ச்சியான போராட்டங்களை ஜனநாயக வழிகளில் தொடர்ந்தும் நடத்தி வருகின்றது. உதாரணமாக நாளை சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ள “எழுகதமிழ்” எழுச்சி  நிகழ்விற்கு கூட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்களே தங்கள் ஆதரவை வழங்கியுள்ளார்கள். இது இவ்வாறிருக்க, அண்மையில் கனடாவிற்கு வருகைதந்த முதலமைச்சர் நீதியரசர்  விக்னேஸ்வரன் அவர்கள் கூட “எழுகதமிழ்” எழுச்சி நிகழ்வுக்கு தொடர்ச்சியான தனது ஆதரவை வழங்கிய வண்ணம் உள்ளார். கனடாவில் அவர் ஆற்றிய தனது இறுதி உரையில் கூட வடக்கு கிழக்கின் இணைப்பு தொடர்பான தனது பார்வையை மக்களுக்கு தெளிவாக விளக்கி, வடக்கும் கிழக்கும் இணைவது என்பது ஒரு சாதாரணமாக இணைப்பு இல்லை, அது தமிழ்த் தேசியத்தை தக்கவைக்கும் அல்லது காத்து நிற்கும் ஒரு காவல் அரண் என்று குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்ற தீவிரமானஅதிர்வை உண்டாக்கும் ஒரு தளமாக நாளைய சனிக்கிழமையன்று நடைபெறும் “எழுகதமிழ்” மேடை அமைந்தால், அது தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகவே அமையும் என்றும் நாம் நம்பலாம்.
இது இவ்வாறிருக்க எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்வளவுதான் விட்டுக் கொடுத்து நடந்தாலும் ஜனாதிபதி மைத்திரியோ அன்றி அவரது சுதந்திரக் கட்சியோ சற்றும் கீழே இறங்கி வருவதாகத் தெரியவில்லை. சமஸ்டி மூலமாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்ற அழுத்தத்தை பிரயோகித்து அல்லது சர்வதேச தூண்டுதலை ஏற்படுத்தி அதனூடாக எவரேனும் பேச்சு வார்த்தைக்கு வந்தால் அந்த பேச்சு வார்த்தைக்கு ஒரு போதும் இணங்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது என்ற செய்தி தற்போது எமது பார்வைக்கு கிட்டியுள்ளது.

சமஸ்டி தீர்வு தொடர்பில் பேசவும் வேண்டாம் என்று குறிப்பிட்ட விசேட வேலைத்திட்ட அமைச்சரும், முன்னாள் மனித உரிமைகள் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க, சர்வசன வாக்கெடுப்பு இல்லாது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றக்கூடிய தீர்மானங்களை நிறைவேற்றி தீர்வுக்கான பயணத்தை முன்னெடுக்க முடியும் எனவும் கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற்ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சமஸ்டி தீர்மானம் தொடர்பாக நினைத்துக்கூடப் பார்க்க வேண்டாம் என்று தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது சமஸ்டி மட்டுமே அரசியல் பிரச்சினைக்கு தீர்வு என்ற அடிப்படியில் செயற்படுவது ஒரு போதும் தீர்வை ஏற்படுத்திக்கொடுக்காது. ஆரம்பத்தில் 13ஆம் திருத்தம் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்படும் நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் கீழான அதிகாரங்கள் தான் வலியுறுத்தப்பட்டது. அதே நிலைப்பாட்டில் தான் நாம் எப்போதும் இருந்து வருகின்றோம். அவ்வாறு இருக்கையில் சமஸ்டி மூலமாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்ற அழுத்தத்தை பிரயோகித்து அல்லது சர்வதேச தூண்டுதலை ஏற்படுத்தி அதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் எவரேனும் பேச்சு வார்த்தைக்கு வருவார்களாயின் அந்த பேச்சு வார்த்தைக்கு ஒரு போதும் இடமில்லை, என்றும் அந்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றுள்ளது என்றே நாம் கருதுகின்றோம்.