இலங்கையில் தமிழில் தேசிய கீதம்! சர்ச்சையில் சிக்கிய ராமதாஸ்

இலங்கை சுதந்திர தின விழாவில், தமிழில் தேசிய கீதம் பாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தவறான கருத்தை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நாட்டிற்கு ஒரு தேசிய கீதம் தான் இருக்க வேண்டும்; தேசிய கீதத்தை இரண்டாகப் பிளவுபடுத்தக் கூடாது. பல இனத்தவரும், மொழியினரும் உள்ள இந்தியாவில் ஒரே தேசியகீதம் இருப்பது போல், இலங்கையில் சிங்கள மொழியில் மட்டம் தேசியகீதம் பாடப்படும் என இரு மாதங்களுக்கு முன்பு இலங்கை அரசு தீர்மானம் கொண்டுவந்தது.

இலங்கை அரசின் தீர்மானத்துக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் (பிப்.,04) நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அதில், ‘சிங்களத்தில் தான் தேசிய கீதம் பாடப்படும்’ என்பதில் இலங்கை அரசு உறுதியாக உள்ளது.

டுவிட்டர் பதிவு

இன்று காலை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இலங்கையில் நாளை நடைபெறவிருக்கும் விடுதலை நாள் விழாவில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழ் தேசிய கீதத்திற்காக குரல் கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சிக்கும், உலகம் முழுவதும் நிறைந்துள்ள தமிழர்களுக்கும் கிடைத்த பெரும் வெற்றி!’ எனப்பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாட அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் ராமதாசின் பதிவு பலரையும் அதிருப்தியடையச் செய்துள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்கள் சிலர், ராமதாசின் பதிவில் உண்மை இல்லை எனக் குறிப்பிட்டு, பதிலுக்கு பதிவு செய்தாலும், ராமதாஸ் தனது பதிவை நீக்கவோ, தகவலை உறுதிப்படுத்தி திருத்தவோ இல்லை.