இலங்கையில் சீனாவின் முதலீட்டை சமன் செய்ய இந்தியாவும் ஜப்பானும் முதலீடு செய்ய வேண்டும்: பிரதமர் ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் சீனாவின் முதலீட்டை சமன் செய்ய இந்தியாவும் ஜப்பானும் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச காலத்தின் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தது. கொழும்பு துறைமுக நகர திட்டம், அம்பாந்தோட்டையில் விமான நிலையம், துறைமுகம், பொருளாதார மண்டலம் ஆகிய திட்டங்களில் சீனா பெருமளவில் முதலீடு செய்தது.

ஏற்கெனவே பாகிஸ்தானின் குவாதர், மியான்மரில் கியான் பியூ, வங்கதேசத்தில் சொனடியா துறைமுக திட்டங்களை குத்தகை அடிப்படையில் சீனா மேற்கொண்டு வருகிறது. இதேபாணி யில் இலங்கையின் துறைமுக திட்டங்களில் சீனா கால் பதித்தது. தேவைப்பட்டால் இந்த துறைமுகங்களை ராணுவரீதியாக சீனா பயன்படுத்தும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பதால் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆரம்பம் முதலே ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.

இலங்கையில் சீனா செய்துள்ள முதலீடுகள் நீண்ட கால கடன் அடிப்படையிலானது. இதற்கான வட்டியை செலுத்த முடியாமல் இலங்கை அரசு திணறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீன திட்டங்களுக்கு உள்ளூர் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் பின்னணியில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

அம்பாந்தோட்டை துறைமுக விரிவாக்க திட்டம் தொடர்பாக இலங்கை அரசுக்கும் சீன அரசு நிறுவனத்துக்கும் இடையே கடந்த ஆண்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. 99 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இலங்கையின் வளர்ச்சிக்காக சீனா மட்டுமன்றி ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும். ஐரோப்பிய நாடுகளும் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

தற்போதைய நிலையில் இலங்கையில் சீனாவே மிக அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. இதனால் உள்நாட்டிலும் சர்வ தேச அளவிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறார். எனவே சீனாவின் முதலீட்டை சமன் செய்ய ஜப்பானும் இந்தியாவும் அதிக முதலீடு செய்ய வேண்டும். ஐரோப்பிய நாடுகளும் இலங்கைக்கு உதவ முன்வர வேண்டும் என்று ரணில் அழைப்பு விடுத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.