இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக விரைவில் அலுவலகம்: வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்

வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை விரைவில் அமைக்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரவித்துள்ளார்.

காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிகோரி தொடர்சியாக போராடி வரும் நிலையில் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே சுரேன் ராகவன் இதனை தெரிவித்தார்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பணி விரைவாக நடைபெற வேண்டும். அது எவ்வளவு சீக்கிரம் நடக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரமாக நடைபெற வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தாக்கல் செய்யலாம். குற்றம் செய்தவர்களை நீதிக்கு முன்னால் கொண்டு வரலாம். அந்த அளவுக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு வலுமை உண்டு என்று அவர் கூறினார்.

செப்டம்பர் மாதம் முடியும் முன் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்ட்டோர் அலுவலகத்தை உருவாக்குவோம்.

துரித கதியில் அந்தப் பணிகள் நடக்க வேண்டுமென்று அதன் தலைவரிடம் கேட்டுள்ளேன். அந்த அலுவலகம் அமைப்பதற்கான இடம் தயார். அதனடிப்படையில் அந்தப் பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்படும்.

இலங்கையில் மட்டுமல்ல வேறு நாடுகளிலும் காணாமல் போனோர் பற்றி தொடர்ந்தும் தேடிக் கொண்டிருக்கின்ற நிலைமைகள் நிலவுகின்றன.

காணாமவ் ஆக்கப்பட்டோர் விடயத்தை பொறுத்தவரையில் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.