இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் பேரணி

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரும், கவன ஈர்ப்பு பேரணி செய்வாய்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்திருந்த இந்தப் பேரணி, மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகில் ஆரம்பமாகி, காந்தி பூங்கா வரை சென்றது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடத்த கோரி பேரணி

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடத்தப்பட வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில், போர்க் குற்றம் தொடர்பாக பொறுப்புக் கூறுவதற்கு இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்றும், இந்தப் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் ‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணையால் மட்டுமே நீதி கிடைக்கும்’ என்கிற வாசகங்களைக் கொண்ட பதாகையினை ஏந்தியிருந்தனர்.

“காணாமல்போன எங்கள் உறவுகள் மீட்கப்படவேண்டும், அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சர்வதேச பொறிமுறை ஊடாக தெரியப்படுத்த வேண்டும். எங்களுக்கு நடந்த அநீதிக்கு பொறுப்புக் கூறவேண்டிய தேவை இலங்கை அரசுக்கு உள்ளது” என்று, இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும், “எமக்கான நீதியினை அரசாங்கம் பெற்றுத் தரும் என்பதில் நம்பிக்கையிழந்த நிலையில்தான், நாங்கள் சர்வதேசத்திடம் நீதி கோரி நிற்கின்றோம்” எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடத்த கோரி பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மதத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்ட இந்தப் பேரணியில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜி. ஸ்ரீநேசன், எஸ்.யோகேஸ்வரன், எஸ். வியாழேந்திரன், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் கே. துரை ராஜசிங்கம், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் ரி. சரவணபவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இன்றைய பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.