இலங்கையில் கல்வி நடவடிக்கைகள் முற்றிலும் பாதிப்பு

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை போராட்டத்தினால் இலங்கை முழுவதிலும் உள்ள பெரும்பாலான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதன்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

கடந்த 22 வருடங்களாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சனைக்கு இதுவரை தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

1994ஆம் ஆண்டு காலப் பகுதி வரை, தாம் சிறந்த முறையில் சம்பளத்தை பெற்ற போதிலும், 1994ஆம் ஆண்டு பெரேராவின் சம்பள ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாரிய சம்பள முரண்பாடுகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிக்கின்றது.

1997ஆம் ஆண்டு முதல் தாம் இந்த பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபத் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிக்கின்றார்.

ஆசிரியர்கள் போராட்டம்: இலங்கை முழுவதும் கல்வி நடவடிக்கைகள் முற்றிலும் பாதிப்பு

இதன்படி, ஆசிரியர் ஒருவர் நாளொன்றுக்கு பெற்றுக் கொள்ளும் சம்பள விவரங்கள்.

முதலாம் வகுப்பு ரூபாய் – 1498.00

தரம் 2.1 – 1305.00, தரம் 2.2 – 1110.00, தரம் 3.1 – (பட்டதாரி) – 1073.00, தரம் 3.1 – (விஞ்ஞான பீடம்) – 1010.00, தரம் 3.1 – (இரண்டு வருட டிப்ளோமா) – 924.00, தரம் 3.11 – 924.00

அதிபர்; ஒருவர் நாளொன்றுக்கு பெற்றுக் கொள்ளும் சம்பள விவரங்கள்.

முதலாம் வகுப்பு – 1544.00, இரண்டாம் வகுப்பு – 1334.00, மூன்றாம் வகுப்பு – 1176.00

இதேவேளை, 2014.10.22 ஆசிரியர் சேவை யாப்பு மற்றும் அதிபர் சேவை யாப்பு ஆகியவற்றின் ஊடாக 30 மாத கால நிலுவை சம்பளம் இல்லாது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றஞ்சுமத்துகின்றது.

இதற்கமைய, அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோருக்கு கிடைக்க வேண்டிய சம்பள தொகையான 22500.00 முதல் 90000.00 ரூபாய் அரசாங்கத்தினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் உபத் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் சுட்டிக்காட்டினார்.

01. பெரேரா ஆணைக்குழுவின் சம்பள முரண்பாட்டை நீக்கி, சம்பளத்தை அதிகரித்தல்.

02. புதிய துணை விதிகளின் ஊடாக ரத்து செய்யப்பட்ட 30 மாத கால நிலுவை சம்பளத்தை வழங்குதல்.

03. சகல ஆசிரியர் உதவியாளர்களையும், ஆசிரியர் தரத்திற்கு உள்வாங்குதல்.

04. 2016ஆம் ஆண்டு பின்னர் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ரத்து செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை மீள நடைமுறைப்படுத்தல்.

05. பாடசாலைக்குள் கற்பித்தல், கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும், பாடசாலை நிர்வாகத்திற்கு இடையூறு விளைவிக்கும் ஆவணங்களை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் உள்ளிட்ட மேலதிக பணிகளை நீக்குதல்.

06. பாடசாலை பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நிதியை நிறுத்தி, கல்விக்காக ஒதுக்கீடு செய்யும் நிதியில் அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாடு தழுவிய ரீதியில் சுகயீன போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆசிரியர்கள் போராட்டம்: இலங்கையில் கல்வி நடவடிக்கைகள் முற்றிலும் பாதிப்பு

இதனால் நாடு முழுவதிலும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குறிப்பிடுகின்றது.

இந்த கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 28ஆம் திகதி கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, போலீசாரால் கண்ணீர்புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் நடத்தப்பட்டமைக்கு இன்றைய தினம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆசிரியர்கள் இன்று காலை கறுப்பு பட்டிகளை அணிந்து போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே, இந்த கறுப்பு பட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, கொழும்பு புறநகர் பகுதியான நுகேகொடையில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினால் பாரிய போராட்டமொன்றும் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.