இலங்கையில் கலவரம்: ஒருவர் பலி

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று( மே 13)புட்டலம் மாவட்டத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர், அவரது தொழிற்சாலையில் இருந்த போது, மர்ம கும்பல் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே டிவியில் ஆற்றிய உரையில் கூறியதாவது: அடையாளம் தெரியாத கும்பல் மதக்கலவரத்தில் ஈடுபட்டு நாட்டை அழித்து விடக்கூடாது என்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வட மேற்கு மாகாணத்தில் பல இடங்களில், அந்த கும்பல் கலவரத்தில் ஈடுபட்டு, பொது சொத்துகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரும் பாதுகாப்பு படையினரும் நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர். ஆனால், அடையாளம் தெரியாத அந்த கும்பல், தொடர்ந்து பிரச்னையை ஏற்படுத்தி வருகின்றனர். ஏப்., 21 ல் தேவாலயங்களில் நடந்த தாக்குதல் குறித்து விசாரணைக்கு அவர்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர் என்றார்.

போலீஸ் தலைவர் சந்தன விக்கிரமசிங்கே கூறுகையில், கலவரக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நிலைமையை கட்டுப்படுத்த முழு படையையும் பயன்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

கிறிஸ்தவ கும்பல் கலவரத்தில் ஈடுபடுவதால், மேற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்கள் வீடுகளுக்குள் தங்கியிருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள், வாகனங்கள் மற்றும் மசூதிகளை அந்த கும்பல் தாக்குதல் நடத்தின. ஹெட்டிபோலா பகுதியில் 3 கடைகளும், கொழும்பு அருகேயுள்ள மினுவங்கோடா என்ற நகரில் ஓட்டல் மற்றும் மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீசார் கூறினர். கலவரக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். இதனை பயன்படுத்தி சிலர் அரசியல் லாபம் அடைய சிலர் முயற்சி செய்வதாக போலீஸ் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.