இலங்கையில் கடல் வழியாக மற்றொரு தாக்குதல்? இந்திய உளவுத்துறை ரகசிய தகவல்

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்பட பல இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. 9 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினார்கள். இதில் 40 வெளிநாட்டினர் உள்பட 253 பேர் கொல்லப்பட்டனர். 500–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். அவர்கள் உள்நாட்டில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பினருடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு இலங்கை அரசு தடை விதித்தது. இலங்கையில், தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இலங்கையில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகவும், அதனால் கடற்கரையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என அமெரிக்கா மற்றும் இந்திய உளவுத்துறை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று யாழ்பாணம் குருநகர் பகுதிக்கு விரைந்த ராணுவம், கடற்படையினர், சிறப்பு படையினர் மற்றும் போலீசார் மோப்ப நாயுடன் வீடு வீடாக சோதனை நடத்தி வருகின்றனர்.

பருத்தித்துறை, நெல்லியடி, நாவாந்துறை, ஐந்துசந்தி மற்றும் தீவகப்பகுதிகள் ஆகிய இடங்களிலும், சாலைகளில் செல்லும் வாகனங்கள் மற்றும் நடந்து செல்வோரிடமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.