இலங்கையில் அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபயா அபார வெற்றி

இலங்கையின் வரலாற்று சிறப்பு வாய்ந்த நகரமான அனுராதபுரத்தில் நடந்த விழாவில், அந்த நாட்டின் அதிபராக கோத்தபயா ராஜபக்சே, நேற்று பதவியேற்றார். சிங்கள மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றிந்தாலும், தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவையாற்றப் போவதாக, அவர் உறுதி அளித்தார்.

அண்டை நாடான இலங்கையில், நேற்று முன்தினம் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இளைய சகோதரரான கோத்தபயா ராஜபக்சே, 70, அபார வெற்றி பெற்றார். அமோக ஆதரவுதன்னை எதிர்த்து போட்டியிட்ட, ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாசாவை விட, 13 லட்சம் ஓட்டுகள் அதிகம் பெற்று, அவர் வெற்றி பெற்றார். இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில், கோத்தபயாவுக்கு, மிக குறைந்த ஓட்டுகளே கிடைத்தாலும், சிங்களர்களின் அமோக ஆதரவுடன், அவர் வெற்றி பெற்றார். இதையடுத்து, இலங்கையின் வரலாற்று காலத்தின் தலைநகராக திகழ்ந்த, மிகப் பழமையான அனுராதபுரம் நகரில், நேற்று பதவியேற்று விழா நடந்தது. இங்குள்ள, பிரசித்தி பெற்ற ருவன்வெளி மகா சயா புத்த மத கோவிலின் அருகே, இந்த விழா நடந்தது. இலங்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூர்யா, கோத்தபயாவுக்கு, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இலங்கையில், இதுவரை, எட்டு பேர் அதிபராக பதவி வகித்தாலும், நிறைவேற்று அதிகாரம் உடைய அதிபர் வரிசையில், ஏழாவது அதிபர் என்ற பெருமை, இவருக்கு கிடைத்துள்ளது. தமிழ் மக்கள் ஆதரவுஇந்த விழாவில், கோத்தபயா பேசியதாவது:இலங்கையின் அனைத்து தரப்பு மக்களும், எனக்கு ஓட்டளிப்பர் என நினைத்தேன். ஆனால், சிங்கள மக்களின் அபார ஆதரவு தான், எனக்கு வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. சிங்கள மக்கள், எனக்கு ஆதரவு அளிப்பர் என, ஏற்கனவே தெரியும். அதேநேரத்தில், தமிழ் மக்களின் ஆதரவும் கிடைக்கும் என நினைத்தேன்; அது நடக்கவில்லை.

ஆனாலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்யும் அதிபராக இருப்பேன். சிங்கள மக்களுக்கு முன்னுரிமை அளித்தாலும், அனைத்து தரப்பினருக்கும் சேவையாற்றுவேன். சிறுபான்மை மக்களும், எங்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். அனுராதபுரம் ஏன்?இலங்கை அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது: கோத்தபயா, இலங்கை அதிபராக பதவியேற்ற அனுராதபுரம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மன்னர் கால ஆட்சியில், இலங்கையின் தலைநகராக இருந்த நகரம் இது. கி.மு., 140ல், இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளனை, சிங்கள மன்னன் துட்ட காமினி தோற்கடித்து, இலங்கையை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக நம்பப்படுகிறது.துட்ட காமினி, அனுராதபுரத்தில் அமைத்த புத்த மத கோவில், புத்த மதத்தினரின் வழிபாட்டுக்கு உரிய தலமாக இன்றும் விளங்குகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான புத்த மதத்தினர், இங்கு வந்து, வழிபட்டு செல்கின்றனர். இந்த வரலாற்று பெருமை வாய்ந்த நகரில் பதவியேற்க வேண்டும் என, கோத்தபயா விரும்பினார். தற்போது, அவரது விருப்பம் நிறைவேறியுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
விரைவில் பார்லி., தேர்தல்?
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயா வெற்றி பெற்றதை அடுத்து, ஆளும் ஐக்கிய தேசிய கட்சியினருக்கும், அந்த கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய பார்லிமென்ட் பதவிக் காலம், 2020ல் முடிவடைகிறது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக, அதற்கு முன்னதாகவே பார்லிமென்டிற்கு தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சிக்கு, அதிபர் தேர்தலில் கிடைத்துள்ள செல்வாக்கை, பார்லிமென்ட் தேர்தலிலும் பயன்படுத்த, அந்த கட்சி தலைவர்கள் விரும்புகின்றனர். இலங்கை அரசியல் சட்டப்படி, பிரதமரை, யாரும் பதவி நீக்கம் செய்ய முடியாது. ஆனால், ராஜபக்சே குடும்பத்தினரின் நெருக்கடி காரணமாக, ரணில் விக்கிரமசிங்கே, தானாகவே பிரதமர் பதவியை ராஜினாமா செய்யலாம். அப்படி ராஜினாமா செய்தால், மகிந்த ராஜபக்சே, எந்த நேரத்திலும் பிரதமராக பதவியேற்க வாய்ப்புள்ளது. பார்லிமென்டை கலைக்க, அதிபருக்கு அதிகாரம் உள்ளது. ‘எப்படி இருந்தாலும், இலங்கையின் தற்போதைய பார்லிமென்டின் பதவிக் காலம், 2020 வரை நீடிக்காது; விரைவில் தேர்தல் நடக்கும்’ என, இலங்கை அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.