இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று – அச்சத்தில் மக்கள்

இலங்கையில் கொரோனா மூன்றாவது கொத்தணி பரவ ஆரம்பித்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அதன் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது.

கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிப்புரிந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கடந்த 3ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மினுவங்கொட மற்றும் திவுலபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

அதன்பின்னர், வேயங்கொட வரை ஊரடங்கு சட்டம் விஸ்தரிக்கப்பட்டதுடன், நேற்றைய தினம் கம்பஹா போலீஸ் பிரிவிற்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்றதை அடுத்து, அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இன்று அதிகாலை முதல் உடன் அமலுக்குவரும் வகையில் மேலும் பல பகுதிகளுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

மினுங்கொட, திவுலபிட்டிய, வேயங்கொட, கம்பஹா ஆகிய பகுதிகளை தவிர, கனேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வீரகுல, வெலிவேரிய, பல்லேவெல, யக்கல ஆகிய பகுதிகளுக்கு உடன் அமலுக்கு வரும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன், களனி பிராந்தியத்தின் ஜா-எல மற்றும் கந்தானை ஆகிய பகுதிகளுக்கும் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை அமலில் இருக்கும் என இலங்கை போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு செல்வதற்கும், அந்த பகுதிகளிலுள்ள மக்கள் வெளியில் வருவதற்கும் முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தூர இடங்களை நோக்கி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளை கடந்து செல்லும் பஸ்கள், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிறுத்துதல் மற்றும் பயணிகளை ஏற்றுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் அறிவித்துள்ளனர்.

மேலும், ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள ரயில் நிலையங்களில், ரயில்கள் நிறுத்துவதும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.