இலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது

வங்காள விரிகுடாவில் உருவான புரெவி புயல், இலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையிலான கடற்பரப்பின் ஊடாக சில நிமிடங்களுக்கு முன்பாக கரையை கடந்துள்ளது.

இது இலங்கையை கடக்கும்வரை புயலாகவே காணப்படும் என வளி மண்டலவியல் திணைக்களம் கூறுகிறது.

வங்காள விரிகுடாவில் உருவாகும் பெருமளவிலான புயல்கள், இலங்கைக்கு அருகே மையம் கொண்டவாறு இந்தியாவை நோக்கி நகரும். ஆனால், புரெவி புயல், இலங்கைக்குள் 20 வருடங்களுக்குப் பிறகே ஊடுருவி தமிழகம் நோக்கி நகருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.

இதற்கு முன்பு 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி இலங்கைக்குள் புயல் ஒன்று ஊடுருவிச் சென்றது. தற்போதைய புரெவி புயலும் அதை ஒத்ததாகவே காணப்படுவதாக மொஹமட் சாலிஹின் குறிப்பிடுகிறார்.

இலங்கையை கடக்கும் வேளையில் மணிக்கு 80 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடம் என்றும் அதேவேளை, குறிப்பாக இலங்கையின் கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சுமார் 200 மில்லிமீட்டர் வரை மழையும் நாட்டின் பிற பகுதிகளில் 100 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகலாம் என்றும் இலங்கை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளதாக திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதேபோல வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த புயலின் தாக்கம் காணப்படும் என அவர் கூறுகிறார்.

இதற்கிடையே, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.

இந்த புயல் பாதிப்பு அதிகம் என்பதனால், கடற்றொழிலாளர்கள் (மீனவர்கள்) மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.