இலங்கையின் அரசியல் தலைவர்கள் இருவருடைய இந்தியவிஜயங்களுக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம்

இலங்கைத் தலைவர்கள் இருவருடைய இந்திய விஜயங்கள் இரு நாட்டுப் பத்திரிகைகளிலும் கடந்த வாரத்தில் பிரதான இடத்தைப் பிடித்திருந்தது. ஒருவர் மகிந்த ராஜபக்ஷ. மற்றையவர் மகிந்தவின் எதிர் தரப்பில் உள்ள சந்திரிகா குமாரதுங்க. இரு துருவங்களாகவுள்ள இந்த இரு முன்னாள் ஜனாதிபதிகளும் ஒரே வேளையில், இந்தியாவுக்கான விஜயங்களை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், இருவரது திசைகளும் நிகழ்ச்சி நிரல்களும் வேறுவேறானதாக இருந்துள்ளது.

இரு நாடுகளுமே தேர்தல்களை எதிர்கொண்டுள்ள ஒரு பின்னணியில்தான் இந்த விஜயங்கள் இடம்பெற்றன. இந்தியா பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. தேர்தல் பிரசாரங்கள் அங்கு ஆரம்பமாகிவிட்டன. கூட்டணிப் பேச்சுக்கள் பேரங்கள் சூடாக இடம்பெறுகின்றன. ஏப்ரலில் பொதுத் தேர்தல் அங்கு நடைபெறும். இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பரில் இத்தேர்தல் இடம்பெறும். இரண்டு நாடுகளிலும் ஆட்சி மாற்றங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் ஒரு காலகட்டத்தில்தான் இந்த விஜயங்கள் இடம்பெற்றன.

இந்த விஜயங்களையொட்டியதாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகிவருகின்றன. இலங்கை குறித்த இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி முக்கியமானது. இந்தியாவுடனான உறவுகளை மகிந்த எப்படிப் பார்க்கின்றார் என்பது அடுத்தது.

பெங்களூரில் மகிந்த
சர்ச்சைக்குரிய உரை

‘இந்து’ பத்திரிகையின் ஏற்பாட்டில் பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஒன்றில் உரையாற்றுவதற்காகவே ராஜபக்சா அழைக்கப்பட்டிருந்தார். சனிக்கிழமை பெப்ரவரி 9 ஆம் திகதி இந்தக் கூட்டம் இடம்பெற்றது. பல்வேறு தரப்புக்களையும் சேர்ந்தவர்கள் பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில்,”இலங்கை இந்திய உறவுகளின் எதிர்காலம்” என்ற தலைப்பில் ராஜபக்ஷ ஆரம்ப உரையை நிகழ்த்தினார். அவரது உரைக்காக சுமார் ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. தனது உரையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சிலவற்றையும் ராஜபக்சா வெளிப்படுத்தினார்.

இந்திய அரசியலில் மட்டுமன்றி, இந்திய இலங்கை உறவுகளிலும் ‘இந்து’ பத்திரிகைக்குள்ள செல்வாக்கு அனைவருக்கும் தெரியும். 1987 இல் இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திட்ட காலம் முதல் இந்து பத்திரிகையும், இந்து ஆசிரியராக இருந்த என்.ராமும் வகித்த பங்கும் முக்கியமானது. ராம் இப்போது இந்து குழுமத்தின் தலைவராக உள்ளார். அவருடைய அழைப்பிலேயே ராஜபக்சா பெங்களூர் சென்றிருந்தார். இரு நாடுகளும் தேர்தல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் ராஜபக்சாவின் இந்த விஜயமும், அவர் அங்கு நிகழ்த்திய உரையும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

2015 ஆட்சி மாற்றத்தில் அதாவது மகிந்த ராஜபக்சாவைத் தோற்கடிப்பதில் இந்தியாவின் பங்கு பிரதானமாக இருந்துள்ளது. ராஜபக்சாவே இதனை முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் குற்றச்சாட்டாகத் தெரிவித்திருந்தார். தற்போதைய பெங்களூர் உரையிலும் மறைமுகமாக இது குறித்து ஒரு விடயத்தை அவர் குறிப்பிட்டிருந்தார். ”இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரே இலங்கை இந்திய உறவுகள் பாதிப்படைந்தன” என்ற கருத்தை அவர் முன்வைத்தார். இது மோடி ஆட்சிக்கு வந்தது குறித்த தனது அதிருப்தியை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தியிருப்பதாகவே கருதப்படுகின்றது.

பெங்களூர், டில்லி
சந்திப்புக்கள்

இந்திய ஆட்சியாளர்கள் குறித்த இந்தக் கருத்தை மகிந்த ராஜபக்சா பெங்களூரில் வெளிப்படுத்திய அதேவேளையில், அவரது பிரதான அரசியல் வாரிசான சந்திரிகா குமாரதுங்க டில்லியில் இருந்துள்ளார். சர்வதேச பொருளாதார உச்சி மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக புதுடில்லி சென்றிருந்த சந்திரிகா, இந்தியப் பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை குறித்தும் இதன்போது சந்திரிகாவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சந்திரிகா இதன்போது என்ன சொல்லியிருப்பார் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.

2015 ஆட்சி மாற்றத்தில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருந்திருந்தாலும், இலங்கையின் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடனான பேச்சுக்களில் இந்தியா நிதானமாகவே இருந்து வருகின்றது. இலங்கையின் ஆட்சி மாற்றத்தை இந்தியா வரவேற்றிருந்தது. ஆனாலும், மோடி கொழும்பு வந்தபோது மகிந்தவை தனியாகச் சந்தித்துப் பேசியிருந்தார். கடந்த வருட முற்பகுதியில் மகிந்தவை டில்லிக்கும் அழைத்திருந்தார்.

கடந்த ”அக்டோபர் 26 அரசியலமைப்பு சதி”யை இந்தியா விரும்பாத போதிலும், அது குறித்து வெளிப்படையாக கருத்துக்கள் எதனையும் இந்தியா வெளியிடவில்லை. ”இலங்கையில் அரசியலமைப்பு பேணப்பட வேண்டும். ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்” என்ற விதத்தில் கருத்தை முன்வைத்ததன் மூலம் மகிந்த திடீர் பிரதமராகியதை இந்தியா விரும்பவில்லை என்பது வெளிப்பட்டது. ஆனால், மகிந்தவுடனான கொடுக்கல் வாங்கல்களுக்கும் இந்தியா தயாராகவே இருந்தது எனவும் சில இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

இப்போது மகிந்த எதிர்க்கட்சித் தலைவராகிவிட்டார். ஆனால், இந்திய அரச தரப்பில் அவருக்கான வரவேற்பைக் காணமுடியவில்லை. பெங்களூர் சென்ற மகிந்த, பாரதிய ஜனதா கட்சி சாராத கட்சிகளின் தலைவர்களைத்தான் தேடித் தேடிச் சந்தித்திருக்கின்றார் என சென்னையிலுள்ள ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவ கௌடாவை பெங்களூரிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்து மகிந்த குழுவினர் பேச்சுக்களை நடத்தியிருந்தார்கள். 1996 இல் சுமார் ஒரு வருட காலம் இந்தியாவின் பிரதமராக அவர் இருந்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அவரை மகிந்த அழைத்திருப்பதாகவும் தெரிகின்றது.

இந்தியாவின்
அணுகுமுறை

இலங்கைத் தலைவர்களின் அணுகுமுறை எவ்வாறானதாக இருந்தாலும், இலங்கை குறித்த இந்தியாவின் அணுகுமுறை நடுநிலையானதாகவே உள்ளது என இராஜதந்திர வட்டாரங்கள் சொல்கின்றன. 2015 ஆட்சி மாற்றத்தை இந்தியா வரவேற்ற போதிலும், அதன் மூலம் இந்தியா எதிர்பார்த்த பல விடயங்கள் நடைபெறவில்லை என்ற ஒரு கருத்தும் உள்ளது. குறிப்பாக, திருமலை எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்தல், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் துறையை அபிவிருத்தி செய்தல் போன்றன இந்தியாவுக்கு வழங்கப்படும் எனச் சொல்லப்பட்டது. இதனைவிட, இந்தியாவுடன் பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை (நுவுஊயு) என்பன தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும், எதுவுமே நடைபெறவில்லை.

இவை அனைத்தையும் விட, மகிந்த காலத்தில் இருந்ததைப் போல இப்போதைய ஆட்சியிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. சீனாவின் கடன்பொறிக்குள் இலங்கை அகப்பட்டுக்கொண்டமை இதற்கான காரணமாக இருக்கலாம்.

இலங்கை அரசாங்கத் தரப்பில் இவ்விடயங்களில் உறுதியான நிலைப்பாடு காணப்படவில்லை என்பது இந்தியாவின் கவலை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்தமையும் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றது. முக்கியமாக, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கு எதிரான கடுமையான ஒரு நிலைப்பாட்டை ஜனாதிபதி எடுத்தார். அதனை மீறிச் செயற்பட ரணிலால் முடியவில்லை. அம்பாந்தோட்டை சீன நிறுவனம் ஒன்றுக்குக் குத்தகைக்குக் கொடுப்பதற்கு இலங்கை எடுத்த முடிவும் கூட டில்லிக்கு அதிருப்தியைத்தான் கொடுத்தது.

இந்தியாவுக்குள்ள
அதிருப்திகள்

இவை அனைத்தும் தமக்கு ஆதரவாக உறுதியான ஒரு நிலைப்பாட்டை இலங்கை அரசு எடுக்கவில்லை என்ற எண்ணத்தை டில்லிக்கு ஏற்படுத்தியிருக்கலாம். இதனைவிட, கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு குறைந்திருந்தமையும், மகிந்தவுக்கான ஆதரவு அதிகரித்திருந்தமையும் தெளிவாகத் தெரிந்தது. இந்தப் பின்னணியில்தான் மகிந்தவுடனான உறவுகளையும் தொடர்ந்தும் பேணிக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு இந்தியா வந்தது என இராஜதந்திரி ஒருவர் குறிப்பிடுகின்றார்.

இந்திய அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை அண்மைக்காலத்தில் அவதானிக்க முடிந்துள்ளது. அக்டோபர் 26 ஆம் திகதி அரசியல் மாற்றத்தின் போது, கொழும்பிலுள்ள மேற்கு நாடுகளின் தூதரகங்கள் வெளிப்படையாகவே ஐ.தே.க.வுக்கு ஆதரவைத் தெரிவித்தன. ரணில் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதில் அவை பின்னணியில் செயற்பட்டன. ஆனால், இந்தியாவின் அணுகுமுறை இதற்கு முரணானதாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. ”இலங்கையில் ஜனநாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும். அரசியலமைப்பு பேணப்பட வேண்டும்” என இராஜதந்திர வார்த்தைகளில் பேசிய இந்தியா, எந்தவொரு தரப்பையும் வெளிப்படையாக ஆதரிக்கவில்லை.

மகிந்தவுக்குள்ள மக்கள் ஆதரவைத் தெரிந்து வைத்துள்ள இந்தியா, அவர் மீண்டும் அதிகாரத்துக்கு வருவாரானால், அவருடனான பேரங்களுக்குத் தயாராகவே இருக்கின்றது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் கூட, வெளிவிவகாரக் கொள்கை பிரதானமாக அதிகாரிகளால்தான் தீர்மானிக்கப்படுவதாக இருக்கும். அந்த வகையில், மகிந்த பெங்களூரில் தெரிவித்துள்ள கருத்துக்கள் இதில் முக்கிய இடத்தைப் பெறும்.