இலங்கையின் அரசியல் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு, ஜனாதிபதி தலைமையில் மஹிந்த ரணில் இணைய வேண்டும் என்கிறார் விக்னேஸ்வரன்

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மஹிந்த ராஜபக்சாவும், ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்த தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் யோசனை தெரிவித்துள்ளார்.

அவுஸ்தரேலியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் விக்டோரியா கோக்லியைச் சந்தித்தபோதே அவர் இந்த யோசனையை முன்வைத்தார். தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலிய பிரதி உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் கலந்துரையாடியவை பற்றி விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 40 ஆண்டு காலமாக பதவி வகித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென ஐ.தே.கவைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒரு ஒப்பந்த அடிப்படையில் 2015 ஜனவரி தொடக்கம் கூட்டரசாங்கம் ஒன்றை நடத்த முடிந்ததாக இருந்தால், தற்போதைய பாராளுமன்றத்தின் மிகுதிக் காலம் வரையில் மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை இணைத்து ஒரு தேசிய கூட்டரசாங்கத்தை அமைத்து முக்கியமான விடயங்களுக்கு ஏன் பரிகாரம் தேட முடியாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் மஹிந்த ராஜபக்ஷவும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரு கூட்டு அரசாங்கத்திற்கான உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டு நாட்டின் முக்கிய பிரச்சினைகளை இருவரும் தீர்க்க முடியும். இரு தரப்பாரும் நாட்டின் நலன் கருதி இவ்வாறான கூட்டு அரசாங்கத்தை ஸ்தாபித் தால் பின்வரும் முக்கிய விடயங்களைத் தீர்த்து வைக்கலாம் .

முதலாவதாக தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கலாம், சிறையில் வாடும் தமிழ்ச் சிறைக் கைதிகளை ஜனாதிபதி ஊடாக விடுவிக்கலாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனே நீக்கலாம், காணாமற் போனோர் பற்றிய அலுவலகத்தை மேலும் பலம் வாய்ந்ததாக மாற்றலாம், ஜெனிவாவில் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஒரு சுமுகமான தீர்வுக்கு வரலாம், தமிழ் மக்கள் பிரச்சினையை மூன்று தரப்பாரும் பேசித் தீர்க்கலாம்.

எமது பொருளாதார நிலையைச் சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜீ.எஸ்.பி நிறுத்தப்பட்டமை சம்பந்தமாகவும் வெளிநாட்டிலிருந்து வரும் உதவிகள் நிறுத்தப்பட்டமை சம்பந்தமாகவும் உரிய நடவடிக்கை எடுத்து நாட்டின் ஸ்திரத் தன்மையை நிச்சயப்படுத்தலாம்.

குறைந்து கொண்டு போகும் எமது ரூபாயின் பெறுமதியைத் திடப்படுத்தலாம். நாட்டின் கடன் சம்பந்தமாக இருவரினதும் ஒருமித்த கருத்துக்களினூடாக அவற்றைத் திரும்பச் செலுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற் கொள்ளவும் முடியும்.

எதற்கும் ரணிலைத் தொடர்ந்து பிரதமராக ஏற்றுக்கொண்டு மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கி இருதரப்பினரிடையேயும் ஒரு உடன்படிக்கையை உண்டு பண்ணலாம். மற்றும் பல விடயங்களில் ஒருங்கிணைந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு இரு தரப்பினரும் முன்வரலாம். இன்றைய கால கட்டத்தில் இது அதி முக்கிய தேவையாக இருப்பதை இரு தரப்பினரும் உணர்ந்து கொண்டால் இவ்வாறான கூட்டரசை அவர்கள் ஸ்தாபிக்க முடியும்.

அதற்கு ஒரே ஒரு முக்கிய தடை இருப்பதை நான் காண்கின்றேன். குறிப்பாக எதிர்க் கட்சியினருக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டிருப்பதைக் கவனத்தில் எடுக்க வேண்டும். அடுத்த இரண்டு வருடங்களுக்கும் இம் மேல்நீதிமன்றங்கள் தொடர்பான நடவடிக்கைகளைத் தற்போதைய அவசரமும் அவசியமும் கருதி தள்ளி வைக்கலாம். ஆனால் உரியகாலத்தில் சட்டம் தனது நடவடிக்கைகளை எடுக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.