இலங்கைக்கு செல்ல கறுப்பு பூனை படை தயார்

பயங்கரவாதிகளை எதிர்கொள்வது குண்டுவெடிப்பு நேரங்களில் கையாள்வதில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்களும் என்.எஸ்.ஜி., , எனப்படும் தேசிய பாதுகாப்பு படையினர் ( கறுப்பு பூனை படை ) சென்னையில் தயார் நிலையில் உள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு காரணமாக 253 பேர் கொல்லப்பட்டனர். இன்னும் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது.

இலங்கையில் கடந்த 21 ம் தேதி தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 253 பேர் பலியாகியுள்ளனர். தாக்குதலை தொடர்ந்து இலங்கை படையினர் பயங்கரவாதிகளை கைது செய்வதில் பெரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கிழக்கு இலங்கையின் கல்முனை பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது நடந்த தாக்குதலின்போது 15 பேர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து ஏப்.26 ம் தேதி இலங்கை அரசிடம் இருந்து இந்திய அரசுக்கு வேண்டுகோள் வந்துள்ளது. இந்த வேண்டுதல் முறைப்படி வந்ததும் நமது என்.எஸ்.ஜி., படையினர் இலங்கை செல்ல தயாராக உள்ளனர். இதற்கென சென்னையில் உள்ள முகாமில் 100 வீரர்கள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இலங்கையில், இந்திய உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் ‘ ரா ‘ உயர் அதிகாரிகள் கொழும்புவில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் இலங்கை விசாரணை அதிகாரிகளுக்கு உதவி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இலங்கையில் குண்டு வெடிக்கும் என இந்தியா இலங்கைக்கு எச்சரித்திருந்தது. இதனை இலங்கை உஷாராக எடுத்து கொள்ளதாதால் அந்நாட்டு அதிபர் சிறிசேன , பிரதமர் ரணில் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்திருந்தனர். ஆனால் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே, இலங்கை அரசின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்திய படை தம் நாட்டுக்கு வருவதை ராஜபக்சே விரும்பவில்லை. இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: இந்தியா, இலங்கைக்கு உதவி செய்துள்ளது. இருப்பினும் இலங்கையிடம் போதிய பலம் இருப்பதாகவும், வெளி நாட்டு படை வீரர்கள் இலங்கை வருவது சரியல்ல. இலங்கை படையினருக்கு போதிய அதிகாரமும், சுதந்திரமும் அளித்தாலே போதுமானது என்றும் கூறியுள்ளார்.