இறுதி தோட்டா வரை போராடியதற்காக பிரபாகரனை பெரிதும் மதிக்கிறேன் – சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் பெரிதும் மதிப்பதாக முன்னாள் இலங்கை ராணுவ தளபதி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கிறார்.

யுத்தம் நிறைவடையும் இறுதித் தோட்டா வரை பிரபாகரன் போராடியுள்ளதாக முன்னாள் ராணுவ தளபதி தெரிவிக்கின்றார்.

பிரபாகரன் பயங்கரவாதியாக இருந்தாலும், இறுதித் தோட்ட வரை அவர் போராடியதை பார்க்கும்போது, தான் ஒரு ராணுவ வீரனாக அவரை பெரிதும் மதிப்பதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் தமக்கு சிறந்ததொரு எதிர்ப்பைக் காட்டியதால் தான் பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் கைப்பற்றிய அனைத்து பகுதிகளையும் இலங்கை அரசாங்கப் படைகள் கைப்பற்றியதாக உலகிற்கு 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி அறிவித்திருந்ததாக சரத் பொன்சேகா கூறுகிறார்.

எனினும், 19ஆம் திகதியும் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் – நந்திகடல் பகுதியில் அங்காங்கே சில தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார்.

19ஆம் தேதி தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டமொன்றை நிறைவு செய்து, அலுவலகத்திற்கு செல்லவிருந்த வேளையிலேயே பிரபாகரன் உயிரிழந்தமை தொடர்பிலான தகவல் தனக்கு கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

யுத்தம் முடிவடைந்ததாக அறிவித்த போதிலும், அங்காங்கே சில தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அந்த தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டதன் பின்னரே பிரபாகரனின் சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

யுத்தம் நிறைவு பெற்றதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டாலும், 19ஆம் தேதியே அதனை உறுதி செய்ய முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இலங்கையின் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக தற்போது பதவி வகிக்கும் ஜெனரல் ரவிபிரியவிற்கு பொறுப்பாக வழங்கப்பட்ட படை பிரிவே பிரபாகரன் மீது இறுதித் தாக்குதலை நடத்திதாகவும் அவர் நினைவூட்டினார்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி அதிகாலை 2.30 அளவில் ஆரம்பமான இறுதி மோதல், 19ஆம் தேதி காலையில் நிறைவடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.