Go to ...
Canada Uthayan Tamil Weekly
* டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் போலீசார் சோதனை    * காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கனடா பிரதமர் சந்திப்பு    * எம்எல்ஏக்கள் பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர் டிடிவி தினகரன் மிரட்டல்    * ஆஸ்திரேலிய துணை பிரதமர் ராஜினாமா    * அமெரிக்காவில் துப்பாக்கிக்கு தடை விதிக்க டிரம்ப் தீவிரம்
previous arrow
next arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Saturday, February 24, 2018

இறக்கும் தருவாயில் சாலையில் கிடந்த 10 ஆயிரம் ஆதரவற்றோரை மீட்ட மனிதநேயம்: ரவுடியாக இருந்து சமூக சேவகரான கர்நாடக தமிழர் ஆட்டோ ராஜா


‘இன்னொரு மதர்தெரசா பிறக்கணும்; நாம் காத்திருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் மதர்தெரசாவாக மாறணும்.’ என்கிறார் கர்நாடகா வாழ் தமிழர் ஆட்டோ ராஜா (49). கடந்த 25 ஆண்டுகளில் இவர் பெங்களூரு சாலையோரத்தில் உணவு, உடை, பராமரிப்பு, ஆதரவு இல்லாமல் அழுகிய, புறக்கணிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய 10 ஆயிரம் பேரை மீட்டு பராமரித்துள்ளார்.

அவர்களுடைய கடைசி காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ வைத்து, கடைசி ஆசைகளை நிறைவேற்றி இறந்ததும் அடக்கம் செய்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி, ‘‘நீங்கள்தான் உண்மையான ஹீரோ’’ என கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் அமிதாப்பச்சன், அமீர்கான், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி போன்றோர் அழைத்து கவுரவித்து விருதுகளை வழங்கி உள்ளனர்.

கர்நாடக முதல்வராக இருந்த குமாரசாமி, ஆட்டோ ராஜாவுக்கு ஒரு ஏக்கர் நிலம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

இதுகுறித்து மதுரைக்கு நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஆட்டோ ராஜா கூறியதாவது: எனது பெற்றோர் வாணியம்பாடியைச் சேர்ந்தவர்கள். 60 ஆண்டுகளுக்கு முன்பே, பிழைப்பு தேடி அவர்கள் பெங்களூரு வந்தனர். சின்ன வயதில் பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் திருடியதோடு நிற்காமல் கண்ணில் படுவோரை தாக்கி பொருட்கள், பணத்தை பறிப்பேன். நீ எங்க பிள்ளையே இல்லடா என பெற்றோர் துரத்திவிட்டபோது சென்னை சென்றேன். அங்கும் திருட ஆரம்பித்தேன். இப்படி 16 வயதிலேயே எந்த ஒரு நோக்கமும், குறிக்கோளும் இல்லாமல் முழுநேர திருடனாக, ரவுடியாக திரிந்தேன்.

சென்னை போலீஸார் என்னைப் பிடித்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். அங்கு ஆடை இல்லாமல் நிற்க வைத்து, கடுமையாக தாக்கி கழிப்பறையில் தூக்கி வீசினார்கள். ஈக்கள் மொய்த்த நிலையில் சாப்பாடு இல்லாமல் நரக வேதனையை அனுபவித்தேன். ரொம்ப சீர்கெட்டு விட்டேன். செத்துப்போய் விடுவேனோன்னு நினைத்தேன். கடவுளே நீர் இருக்கிறீரான்னு மனசுக்குள்ளே கதறியபோது கடவுள்போல என் பெற்றோர் கேள்விப்பட்டு என்னை மீட்டு மீண்டும் பெங்களூரு அழைத்துச் சென்றார்கள். அதன் பிறகும் நான் திருந்தவில்லை. ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தேன். அரசியல் கட்சிக்காரங்க சொன்னா, வாகனங்களை கொளுத்துவது, அடித்து நொறுக்குவது, ஆட்களை அடிப்பது, போராட்டம், தர்ணா என மீண்டும் ரவுடியானேன்.

அப்போது ஒருமுறை ஆட்டோவில் சென்றபோது, ரோட்டோரத்தில் அழுகி புழுக்கள், ஈக்கள் மொய்த்த நிலையில் ஆடை இல்லாமல் உயிருக்கு போராடிய ஒருவரை பார்த்தேன். அவரை உற்று கவனித்தபோது, அதே கோலத்தில் நான் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்தது நினைவுக்கு வந்தது. அன்று முதல் இன்று வரை ரோட்டோரத்தில் ஆதரவில்லாமல் மரண தருவாயில் போராடுபவர்களை மீட்டு வந்து குளிப்பாட்டி சாப்பாடு கொடுத்து கவனிக்க ஆரம்பித்தேன். அவர்கள் சிறுநீர், மலம் கழித்தால் சுத்தம் செய்து குழந்தைபோல கவனிக்கிறேன்.

ஆரம்பத்தில் என் மனைவியே என்னுடன் வாழ விரும்பாமல் குழந்தைகளுடன் என்னைவிட்டு போய்விட்டார். கூடப் பிறந்தவர்கள், உறவினர்கள் என்னை வெறுத்து ஒதுக்கினர். ஆனால், நான் உறுதியாக, எனது வாழ்க்கை ஆதரவற்றோருக்குத்தான் என இருந்துட்டேன். எனது செயல்பாடுகளை பார்த்து மாநில முதல்வர், பிரபலங்கள் பாராட்டியபோதுதான், என்னை புறக்கணித்தவர்களுக்கு எனது சேவை புரிந்தது. தற்போது என்னோட தொட்டகுப்பி ஆசிரமத்தில் 750 பேரை பராமரிக்கிறேன். இறக்கும் தருவாயில் இருக்கும் அவர்களை முடிந்தளவு கவனித்து சிரிக்க வைக்க முயற்சி செய்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் 5 பேர் இறப்பார்கள்

ஆட்டோ ராஜா மேலும் கூறுகையில், தொண்டுள்ளதோடு உதவுபவர்கள் மூலம் அவர்களுக்கான சாப்பாடு, பராமரிப்பு, மருத்துவச் செலவுக்கு மாதம் ரூ. 12 லட்சம் செலவழிக்கிறேன். ஒவ்வொரு நாளுக்கும் 2 பேர், 3 பேர், ஏன் ஒரே நேரத்தில் 5 பேர் கூட இறப்பார்கள். அவர்களுக்கு மகனாகவும், சகோதரனாகவும் இருந்து அடக்கம் செய்கிறேன்.

என்னோட பராமரிப்பில் இருப்பவர்களில் 80 சதவீதம் பேர் மன நோயாளிகள். 10 சதவீதம் குழந்தைகள். மீதி பேர் வயதானவர்கள். மனநோயாளிகளை, கை கால் ஊனமுற்றவர்களை அதிலிருந்து குணப்படுத்தி, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களை என்னோட பணிக்கு ஈடுபடுத்துகிறேன். தற்போது அரசாங்கத்தினரே ஆதரவற்றவர்கள் எங்கு கிடந்தாலும் என் ஆசிரமத்தில் கொண்டுவந்து சேர்த்து செல்கின்றனர். அவர்களை பராமரிப்பது மட்டுமே எனது வேலை. தமிழகத்திலும் எனது சேவையை விரைவில் தொடங்க உள்ளேன் என்றார்.

One Response “இறக்கும் தருவாயில் சாலையில் கிடந்த 10 ஆயிரம் ஆதரவற்றோரை மீட்ட மனிதநேயம்: ரவுடியாக இருந்து சமூக சேவகரான கர்நாடக தமிழர் ஆட்டோ ராஜா”

  1. RAAMASELVARAJ
    March 21, 2017 at 12:17 pm

    good article. we are working in tamil media here (chennai)… we did not give priority like this news. congrats for your coverage. Tamizhan engirunthalum vazha…. tamizhan, tamizhan thanda……!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2