இரு அணிகள் மீண்டும் இணைகிறதா?- நிபந்தனையற்ற பேச்சுக்கு தயார் என்கிறார் ஓபிஎஸ்

இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்துபேச தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக டெல்லியில் இன்று விசாரணை நடக்கிறது. இரட்டை இலைச்சின்னம் எங்கள் அணிக்குதான் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” எனவும் அந்த ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் வெளியேற்றிவிட்டு அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் மூத்த அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகின.

இதுதொடர்பாக மற்ற அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், எம்.பி., எம்எல்ஏக்களிடம் இவர்கள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டன.

இந்நிலையில், கட்சி சின்னம் பெற தினகரன் லஞ்சம் வழங்கியதாக புதியதொரு சர்ச்சை இன்று எழுந்துள்ளது. இத்தகைய பரபரப்பான சூழலில், சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக தினகரன் பெங்களூரு சென்றிருக்கிறார்.

இதற்கிடையில், இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்துபேச தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கட்சி வட்டாரத் தகவல்:

அதிமுகவில் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தை மக்களும், தொண்டர்களும் ஏற்கவில்லை. இது கட்சிக்கு நல்லதல்ல. எனவே, கட்சியை மீட்க வேண்டும் என்றால், தற்போது உள்ள இரு அணிகளும் ஒன்றிணைய வேண்டும். அதற்கான முயற்சிகளை தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட சில மூத்த அமைச்சர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதற்காக ஓபிஎஸ் தரப்பினரிடம் மட்டுமின்றி, அதிமுகவைச் சேர்ந்த பிற அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்தும், விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்தும் நீக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு இரு அணிகளிலும் உள்ள பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவிப்பதால், மிக விரைவில் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வாய்ப்பு உள்ளது.

மேலும், இரட்டை இலை சின்னமும் மீட்கப்படும். ஆட்சி நிர்வாகம், கட்சி நிர்வாகத்தில் யார், யார் இருப்பது என்பது குறித்து இரு அணிகளும் இணைந்தபிறகு முடிவெடுக்கப்படும்” என கட்சி வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன.