இரவு இந்திய மணி 9.17 க்கு இந்திய மண்ணை தொட்டார் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன்

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் இன்று(மார்ச் 1) இரவு 9.17 மணிக்கு ஒப்படைக்கப்பட்டார். அவரை ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர். இந்தியாவிடம் அபிநந்தனை ஒப்படைப்பதில், பாகிஸ்தான் இருமுறை காலதாமதம் செய்து இரவில் தான் ஒப்படைத்தது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின், பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீது, இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் போர் விமானங்கள், நேற்று முன்தினம், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சித்தன. பாக்., விமானங்களை விரட்டிச் சென்ற, இந்திய விமானப்படையின், ‘மிக் – 21’ ரக விமானம், பாக்.,எல்லைக்குள் விழுந்தது. விமானத்தில் இருந்த, தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்திய விமானப் படையின் விங் காமாண்டருமான, விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.

அபிநந்தனை இன்று(மார்ச் 1) அன்று விடுதலை செய்வோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். இதனையடுத்து, ராவல் பிண்டியிலிருந்து லாகூர் வரை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அபிநந்தன், வாகா எல்லையிலிருந்து 8 கி.மீ.,க்கு முன்னதாக படாப்பூர் முகாமில் வைக்கப்பட்டடார். இருப்பினும் இந்தியாவிடம் அபிநந்தனை ஒப்படைப்பதில் பாக்., தொடர்ந்து கால தாமதம் செய்து வந்தது. ஒப்படைக்கும் நேரத்தை இருமுறை மாற்றியது. அபிநந்தன் விவகாரத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கவனித்து வந்தார்.

இந்நிலையில் இரவு 9.17 மணிக்கு, அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். வாகா எல்லையில் அவரை விமானப்படை அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளும் வரவேற்று அழைத்து சென்றனர். நாடு முழுவதும் மக்கள் அவரது வருகையை கொண்டாடினர்.

எல்லையிலிருந்து அமிர்தசரஸ் அழைத்து செல்லப்படும் அபிநந்தன், பின்னர் விமானம் மூலம் டில்லி அழைத்து செல்லப்பட உள்ளார். அவருக்கு, இந்திய டாக்டர்கள், குழுவினர் மருத்துவ பரிசோதனை நடத்தவுள்ளனர்.
இது குறித்து விமானப்படை ஏர் வைஸ் மார்ஷல் ரவி கபூர் கூறியதாவது: அபிநந்தன் முறைப்படி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டார். போர் விமானத்திலிருந்து குதித்துள்ளதால், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. அவரை ஒப்படைத்தது, எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.