இரட்டை இலை சின்னம் பெற ஓபிஎஸ் அணி சார்பில் 12,600 பிரமாண பத்திரங்கள் தாக்கல்

இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணி சார்பில் நேற்று 12 ஆயிரத்து 600 பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே சர்ச்சை எழுந்தது. எனவே இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரு பிரிவினரும் தனித்தனி சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தல் ரத்தான நிலையில், இரு தரப்பையும் கடந்த மாதம் 17-ம் தேதி சின்னம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், சசிகலா தரப்பு இதற்கு கூடுதல் அவகாசம் கேட்டதால் இரு அணியினரும் ஜூன் 16-ம் தேதிக்குள் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி யுள்ளது.
இதைத்தொடர்ந்து சின்னத்தை மீட்பதற்காக இரு அணிகளையும் இணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அதேநேரத்தில் இரு அணிகளும் பிரமாணப் பத்திரங்களை தயார் செய்து அவற்றை தாக்கல் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளன. சசிகலா அணியில் முதல்வர் கே.பழனிசாமி தரப்பினர், மாவட்ட செயலாளர்களிடம் இதற்கான மாதிரி படிவங்களை வழங்கி, பிரமாணப் பத்திரங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால். ஓபிஎஸ் அணியோ, பிரமாணப் பத்திரங்களை நிர்வாகிகள், தொண்டர்களிடம் இருந்து பெற்று அவ்வப்போது தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து வருகிறது. முதலில் 5 ஆயிரத்து 780, அதன்பின் 9 ஆயிரத்து 110. கடந்த மாதம் 6 ஆயிரத்து 500 என 21 ஆயிரத்து 680 பிரமாணப் பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணியினர் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று 12 ஆயிரத்து 600 பிரமாணப் பத்திரங்களை ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர். ஓபிஎஸ் அணியில் உள்ள வழக்கறிஞர் பாபு முருகவேல் உள்ளிட்டோர் இந்த பிரமாணப் பத்திரங்களை நேற்று தாக்கல் செய்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான பிரமாணப் பத்திரங்கள் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.