இப்படை வெல்லும்

ஐடி துறையில் வேலைபார்த்து, பிறகு பணியிழந்த மதுசூதனன் (உதயநிதி) பார்கவியைக் (மஞ்சிமா மோகன்) காதலித்து வருகிறான். இந்தக் காதலுக்கு காவல்துறை அதிகாரியான பார்கவியின் அண்ணன் (ஆர்.கே. சுரேஷ்) எதிர்ப்புத் தெரிவிக்கிறார். இதனால், பார்கவியும் மதுசூதனனும் பதிவுத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இதற்கிடையில் சிறையிலிருந்து தப்பிய சோட்டா (டேனியல் பாலாஜி) என்ற தீவிரவாதி சென்னையின் பல இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தத் திட்டமிடுகிறான்.
திரைப்படம் இப்படை வெல்லும்
நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே. சுரேஷ், டேனியல் பாலாஜி,ராதிகா, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா
இசை டி. இமான்
இயக்கம் கௌரவ்
சோட்டாவை யதேச்சையாக சந்திக்கும் மதுசூதனனும் குழந்தைவேலு (சூரி) என்ற டப்பிங் கலைஞரும் காவல்துறையால் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் உண்மையை விளக்குவதற்கு முன்பாக பார்கவியின் அண்ணனான காவல்துறை அதிகாரி, அவர்களைச் சுட்டுக்கொல்ல முயற்சிக்கிறார். இதிலிருந்து தப்பும் மதுசூதனன், எப்படி சோட்டாவைப் பிடித்து, குண்டுவெடிப்பைத் தடுத்து, பார்கவியை கைப்பிடிக்கிறார் என்பதே மீதிக் கதை.
உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன்
குண்டு வைக்க நினைக்கும் சோட்டா, காதலியுடன் திருமணம் செய்துகொள்ளப் புறப்படும் மதுசூதனன், மனைவியின் பிரவசத்திற்காகப் புறப்படும் குழந்தைவேலு என ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத மூன்று பேரின் வாழ்க்கையை இணைத்து, ஒரு ஆக்ஷன் த்ரில்லரை உருவாக்குவது சவாலான காரியம்தான். அதற்கென பொருத்தமான கதையையும் தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர்.
‘ஏமனில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பஞ்சம் ஏற்படலாம்’
பணமதிப்பிழப்பு: ‘மாபெரும் பொருளாதார கொள்கைப் பேரழிவு’
ஆனால், திரைக்கதை பல இடங்களில் மிக மெதுவாக நகர்கிறது. தீவிரவாதியுடன் இருந்ததாக கருதப்படும் மதுசூதனனும் குழந்தைவேலுவும் காவல்துறையின் பிடியில் வந்த பிறகு, நிகழும் பல சம்பவங்கள் இயக்குனரின் வசதிக்கு நடக்கிறதே தவிர, இயல்பான நிகழ்வுகளாக இல்லை. பல காட்சிகளை உருவாக்கியவிதத்தில் கவனக் குறைவு தென்படுகிறது.
சூரியை கதாநாயகனின் நண்பராக வைத்து, நகைச்சுவைக்குப் பயன்படுத்தாமல் அழுத்தமான பாத்திரத்தை அவருக்கு அளித்திருப்பது ஒரு மாறுபட்ட முயற்சி. பாடல்கள் அதிகம் இல்லாததும் படத்தின் குறிப்பிடத்தக்க அம்சம்.
டேனியல் பாலாஜி
படம் துவங்கி பல நிமிடங்களுக்குப் பிறகே அறிமுகமாகிறார் உதயநிதி. அவரை ஜாலியான ஒரு ஹீரோ என்ற இமேஜிலிருந்து மாற்றி, ஆக்ஷன் ஹீரோவாக மாற்றும் முயற்சிக்கு இந்தப் படம் வெகுவாக உதவக்கூடும்.
கதாநாயகி மஞ்சிமா மோகனுக்கு தமிழில் மேலும் ஒரு படம்.
பயங்கரவாதிகள் பயங்கரமாக இருப்பார்கள் என்ற பொது நம்பிக்கைக்கு ஏற்ப டேனியல் பாலாஜியை பயங்கரமாக உலாவவிட்டிருப்பது, படத்தின் இறுதியில் பயங்கரவாதி என்று நம்பப்படுபவர்களை போலி என்கவுன்டரில் சுட்டுத்தள்ளுவதுதான் நியாயம் என்று கூறி சுட்டுத்தள்ளுவது போன்றவை படத்தின் நெகட்டிவான அம்சங்கள்.