இன்று பெயர்ச்சியடைந்தார் சனிபகவான்; லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம்

திருநள்ளாறில் புகழ்பெற்ற சனிபகவான் தலமான தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சனி தோஷ நிவர்த்திக்கு பிரசித்தி பெற்ற தலமாக விளங்கும் இந்த கோவிலில் சனி பகவானுக்கு என்று தனி சன்னதி உள்ளது.
சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடை வதையொட்டி  இங்கு சனிப் பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா நேற்று இரவு முதல் தொடங்கியது.
சூரிய மண்டலத்தை சுற்றிவர அதிக நாட்கள் எடுக்கும் கிரகம் சனி. ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை இருப்பார். 12 ராசிகளையும் வலம் வர 30 ஆண்டுகள் ஆகும். எனவே சனிப்பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று டிச.19, காலை 10.01 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். 2020 டிச.20 வரை இந்த ராசியில் இருப்பார்.
இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை சனி பகவானுக்கு நல்லெண்ணை, மஞ்சள், திரவியப்பொடிகள், சந்தனம், பன்னீர், பழங்கள், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அதன் பின்னர் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து உலக நன்மைக்காக 27 நட்சத்திரங்கள், 12 ராசிகளுக்கு சங்கல்பம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது.
சரியாக காலை 10.01 மணிக்கு சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு  இடம் பெயர்ந்தார். அப்போது சனி பகவானுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சனி பகவானை தரிசனம் செய்தனர்.
சனி பகவானை வழிபட தமிழகம், புதுவை மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பஸ், வேன் மற்றும் கார்களில்  நேற்று இரவு முதலே திருநள்ளாறு வரத்தொடங்கினர். இன்று காலையிலும் ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.