இன்னோவா சம்பத் என்ற பழி வேண்டாம்; ஜெயலலிதா கொடுத்த காரை திருப்பிக் கொடுத்தார் நாஞ்சில் சம்பத்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தனக்கு வழங்கிய இன்னோவா காரை, இன்று காலை அதிமுக தலைமைக் கழகத்தில் விட்டுச் சென்றுள்ளார் நாஞ்சில் சம்பத்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, “2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி இயக்க பிரச்சாரத்திற்காக கழகத்தின் பொருளாளர் பெயரில் வாங்கப்பட்ட கார் என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அம்மா அவர்கள் சாவியை என்னிடத்தில் ஒப்படைத்தார்கள். அந்த காரை கட்சியின் பிரச்சாரத்தைத் தவிர என்னுடைய சொந்த உபயோகத்திற்காக ஒரு நாள் கூட பயன்படுத்தவில்லை.

பிரச்சாரம் இல்லாத நாட்களில் என்னுடைய நண்பர் ஜாபர் அலி வீட்டில் பாதுகாப்பாக நிற்கும். இப்போது 8 மாத காலமாக பிரச்சாரம் இல்லை. வீணாக அதை வைத்துக் கொண்டு இன்னோவா சம்பத் என பழியும் சுமந்து கொண்டு எதற்காக இருக்க வேண்டும் என்று எண்ணி இன்று காலை தலைமைக் கழகத்தில் ஒப்படைத்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத். அப்போது, அவருக்கு இன்னோவா காரை பரிசாகக் கொடுத்தார் ஜெயலலிதா.