இனவாதப் பிரச்சாரங்களால் பாதிக்கப்படுபவர்கள் நடுத்தர வகுப்பு மக்களே!

மதவாதத்தை தூண்டும் நடவடிக்கைகள் மற்றும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட தாக்குதல்களுக்கு தூபமிடுவதை ஊக்குவிக்கும் செற்பாடுகள் போன்றவை, இலங்கைக்கு அருகில் உள்ள பாரதத் திருநாட்டில் மேற்கொள்ளப்படுவதால் அந்த நாடு மோசமான விளைவுகளை எதிர்கொள்ளுகின்றது. மதவாதப் பிடிக்குள் தத்தளிக்கும் பாரத தேசத்தில் இந்து முஸ்லிம் மோதல்களை தூண்டி நிற்பதில் பாகிஸ்த்தான் போன்ற நாடுகளும் அடங்குகின்றன. இதனால் அந்த நாடு எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மிக அதிகானவை ஆகும்.

இதேபோன்று இனவாத செயற்பாடுகளும் விமர்சனங்களும் மிகவும் மோசமான விதத்தில் பரவி நிற்கும் இலங்கையிலும் பாதிப்புக்கள் மக்களை வருத்தியும் வதைத்தும் நிற்கின்றன. அங்கு இனவாதத்தை தூண்டும் முதற் பிரிவினராக பௌத்த பிக்குகள் அல்லது அவர்களின் தலைமைப் பீடங்கள் காரணமாக அமைகின்றன. அவர்களைத் தொடர்ந்து இனவாதப் போக்குக் கொண்ட அரசியல்வாதிகள் இடம் பிடிக்கின்றார்கள். அவர்கள் அவ்வாறான இனவாதப் பிரச்சாரங்களை அவர்கள் மேற்கொள்ளும் இடங்கள் மக்கள் மன்றம் என்று அழைக்கப்படுகி;ன்ற பாராளுமன்றங்கள் ஆகும். அதைவிட அரசியல் கட்சிகளிள் தலைமை அலுவலகங்களில் நடைபெறும் விசேட கூட்டங்களிலும் இவ்வாறான செயற்பாடுகள் அதிகமாக அரங்கேறுகின்றன.

இலங்கையில் பல தடவைகளில் இனக்கலவரங்கள் ஏற்படுவதற்கு காரணமாக பௌத்த சிங்கள பேரினவாதம் முக்கியத்துவம் பெற்றது. இனவாதத் தாக்குதல்கள் தொடர்பாக திட்டமிடும் விடயங்கள் பொதுவாகவே பௌத்த விகாரைகளின் அறைகளுக்குள்ளும் இராணுவ முகாம்களுக்குள்ளும் இடம் பெறுவது பற்றி அறிந்தவர்கள், அதற்கான காரணங்களையும் சரியாவே தெரிந்து வைத்துள்ளனர். சில வேளைகளில் இலங்கையில் இடம்பெறும். இனவாதப்போக்குகளுக்கு அரச அதிகாரிகளும் காரண கர்த்தாக்களாக இருந்துள்ளார்கள்.அவர்கள் தங்களுக்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்கின்றார்கள். இதனால் தமிழ் மக்கள் அனைத்து விடயங்களிலும் பாதிக்கப்படுகின்றார்கள்.

இவ்வாரம் நாம் இந்த இனவாத மோதல்கள் தொடர்பான கருத்துக்களை முன்வைப்பதற்கு காரணமே கடந்த சில நாட்களாக இலங்கையில் இடம்பெறும் விடயங்களே ஆகும். குறிப்பாக பௌத்த பிக்குகள் தமிழ் பேசும் அமைச்சர்களோடு நேரடியாக மோதிய காட்சிகளும் வாதங்களும் ஊடகங்களினால் காட்சிப்படுத்தப்பட்டன.இதனால் சிங்கள பௌத்த மேலாதிக்கம் அல்லது அடவாடித்தனம் தமிழ் மக்கள் மீது மிக விரைவில் பாரிய தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு தங்களை நகர்த்திவருகின்றன என்பதையே நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்