இந்து மதத்தினர் மீது விஷம் கக்குவது கூடாது என கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

‘மத பிரசாரம் செய்பவர்களுக்கு, அதிக பொறுப்புணர்வு வேண்டும். மற்ற மதத்தினர் மீது விஷம் கக்குவது, மதத்தின் நோக்கத்திற்கு எதிரானது. ஒவ்வொரு வார்த்தையையும் வெளிப்படுத்தும் போது, பொறுப்புணர்வு தேவை’ என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

ஹிந்து மத கோவில்களையும், கடவுள்களையும் இழிவுபடுத்தி பேசியதாக, ‘இயேசு விடுவிக்கிறார்’ என்ற அமைப்பின் நிறுவனரான மோகன் சி.லாசரஸுக்கு எதிராக, கோவை, சேலம், அரியலுார் உள்ளிட்ட பல போலீஸ் நிலையங்களில், புகார்கள் அளிக்கப்பட்டன. இவற்றில், சில புகார்களில் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மோகன் சி.லாசரஸ், மனுக்கள் தாக்கல் செய்தார். இம்மனுக்கள், நீதிபதி ஆனந்த் வெங்க டேஷ் முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால் ஆஜராகி, ”சென்னை, ஆவடியில் உள்அரங்கில் கூடியிருந்தவர்களிடம் பேசியுள்ளார்; பொதுக்கூட்டத்தில் அல்ல. மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில், அவர் பேசவில்லை,” என்றார்.

மோகன் சி.லாசரஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘ஹிந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்திய வகையில், இடம் கொடுத்த சம்பவத்துக்காக நான் வருந்துகிறேன்.’இத்தகைய எண்ணத்தை, ஹிந்துக்கள் மனதில் ஏற்படுத்தும் நோக்கம் எனக்கு ஒருபோதும் இல்லை. எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க, போதிய கவனம் செலுத்துகிறேன்’ என, கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: பொறுப்பற்ற பேச்சால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து, இதுபோன்று எதிர்காலத்தில் நடக்காது என, முழு மனதுடன் மன்னிப்பு கேட்டு, மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளார். மனித குலம் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான், மதங்களின் நோக்கம். நம்பிக்கை அடிப்படையில் தான் மதங்கள் உள்ளன.

அந்த நம்பிக்கையால் ஏற்படும் உணர்வுகளுக்கு எதிராக விமர்சனம் வரும் போது, அதற்கான எதிர்வினையும் கடுமையாக வருகிறது. மத நம்பிக்கையில், பலர் கண்மூடித்தனமாக ஒன்றிப் போயுள்ளனர். மற்ற மதங்களுக்கு எதிராக, அவமரியாதையாக பேசுகின்றனர். அடுத்தவர்களின் மத நம்பிக்கைக்கு எதிராக, விஷத்தை கக்குவது; அவர்களிடம் வெறுப்புணர்வை வளர்ப்பது, மதத்தின் நோக்கத்துக்கு எதிரானது.

மதங்களை பரப்புபவர்களுக்கு, அதிக பொறுப்புணர்வு வேண்டும். மற்றவர்களின் மத நம்பிக்கையை குறைத்து மதிப்பிட்டு, பொறுப்பற்ற முறையில் பேசினால், மற்ற மதங்களை பின்பற்றுபவர்கள் மத்தியில், வெறுப்பு விதைகளை விதைப்பதாகி விடும். எனவே, ஒவ்வொரு வார்த்தையையும் பேசும்போது, மிகுந்த பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

மனுதாரர் ஒன்றும் போட்டி வணிகம் நடத்தவில்லை. அதனால், மற்ற மதங்களை விட, தான் சார்ந்துள்ள மதம் உயர்ந்தது என, காட்டுவதற்காக, இப்படி பேச தேவையில்லை. ஒருவேளை மனுதாரர் அப்படி கருதினால், அவரது நன்மைக்கும், அவரைப் பின்பற்றுபவர்களின் நன்மைக்குமாக, திருந்திக் கொள்ள வேண்டும்.

மனுதாரர் மட்டுமல்லாமல், அவரை போன்றவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மிகுந்த பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இதை பின்பற்றவில்லை என்றால், மதச்சார்பின்மைக்கு ஆபத்தாகி விடும். தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்து, மனு தாக்கல் செய்துள்ளர். எனவே, மனுதாரருக்கு எதிரான வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.