இந்திராணிக்கு அனுமதி: சிதம்பரம், கார்த்திக்கு நெருக்கடி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாற இந்திராணி முகர்ஜிக்கு டில்லி கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதனால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக ரூ.305 கோடி மதிப்பிலான வெளிநாட்டு முதலீடுகளை பெற்று தருவதற்காக ரூ.4 கோடி லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது. வெளிநாடு முதலீடுகளை பெற்ற அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த தனது தந்தை ப.சிதம்பரத்தின் அதிகாரத்தை கார்த்தி தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்கள் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜியிடம் விசாரணை நடத்தினர். இந்திராணி முகர்ஜியும், பீட்டர் முகர்ஜியும் தங்கள் மகள் ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தற்போது மும்பை சிறையில் இருந்து வருகின்றனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக பிப்ரவரி மாதம் சிதம்பரம் மற்றும் கார்த்தியிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை துருவிதுருவி விசாரணை நடத்தின. இதற்கிடையில், வெளிநாட்டு முதலீடுகளை பெற்று தர கார்த்தி தன்னிடம் லஞ்சம் பெற்றதாக வாக்குமூலம் அளித்த இந்திராணி முகர்ஜி, இந்த வழக்கில் அப்ரூவராக விரும்புவதாகவும் கூறி இருந்தார்.

அப்ரூவராக மாற அனுமதி கேட்டு டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் இந்திராணி தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த கோர்ட், இந்திராணி அப்ரூவராக அனுமதி அளித்துள்ளது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 11 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திராணி அப்ரூவராகி வாக்குமூலம் அளித்தால் இந்த வழக்கு தொடர்பான பல உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே ஏர்செல்-மேக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமின் பெற்றுள்ள ப.சிதம்பரம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. அத்துடன் இவ்வழக்கில் ஜாமினில் வெளிவந்து, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.,யாகி உள்ள கார்த்தி சிதம்பரத்தின் பதவி பறிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது