இந்திரஜித்: சினிமா விமர்சனம்

தயாரிப்பாளர் எஸ். தாணுவின் மகன் கலாபிரபு, சக்கரக்கட்டி படத்திற்குப் பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் இது. ஒரு தொன்மையான அதிசயப் பொருளை ஆய்வாளர்கள் தேடிச் செல்வது போன்ற சாகசக் கதை என்று கூறப்பட்டிருந்ததாலும் ட்ரைலர் சற்று வித்தியாசமாக இருந்ததாலும் கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சூரியனிலிருந்து தெறித்துவரும் ஒரு பொருள் பூமியில் வந்து விழுகிறது. அந்தப் பொருளுக்கு காயங்களையும், நோய்களையும் குணப்படுத்தும் சக்தி இருப்பதால் சித்தர்கள் அதை ஒரு ரகசிய இடத்தில் வைக்கிறார்கள். அவர்கள் காலத்திற்குப் பிறகு அந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பது தெரியாமலேயே போய்விடுகிறது.

கோவாவில் உள்ள ஒரு வரலாற்றுப் பேராசிரியர் அந்தப் பொருளைத் தேட ஆரம்பிக்கிறார். அவரிடம் உதவியாளராக வந்துசேரும் இந்திரஜித் (கௌதம் கார்த்திக்) அது தொடர்பான வரைபடத்தைத் தேடி எடுக்கிறார். அதே நேரத்தில் இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் அந்தப் பொருளைத் தேடுகிறார். அந்தப் பொருள் அருணாச்சலப் பிரதேசத்தில் இருப்பதாகத் தெரிய, எல்லோரும் அங்கு செல்கிறார்கள்.

‘இந்தியானா ஜோன்ஸ்’ படவரிசையின் பாணியில் ஒரு பரபரப்பான ஆக்ஷன்-சாகசப் படத்தை எடுக்க விரும்பியிருக்கிறார்கள். ஆனால், கிடைத்திருப்பதென்னவோ படுசுமாரான படம்.

துவக்கத்திலிருந்தே எந்த ஒரு காட்சியும் படத்தோடு ஒன்றவைக்கவில்லை. நான்கு வருடங்களாக அதிசயப் பொருளின் இடம் குறித்து பேராசிரியர் ஆராய்ந்துகொண்டிருக்கும் நிலையில், அப்போதுதான் அவருடன் வந்து சேரும் கதாநாயகன், அதை உடனே கண்டுபிடித்துவிடுகிறான். சித்தர்கள்தான் அதை வைத்திருந்தார்கள் என்று சொல்லப்படும் நிலையில், அவர்கள் ஏன் அதை அருணாச்சல பிரதேசத்தில் கொண்டுபோய்வைக்கிறார்கள்? பல நூற்றாண்டுகள் கழிந்த பிறகு 1800களில் வாழும் பேராசிரியரின் தாத்தாவுக்கு சில புத்தகங்களைப் படித்த பிறகு எப்படி அது தெரிகிறது, 1800களின் இறுதியில் மைலாப்பூரில் இருக்கும் ஒருவர் அந்த அதிசயப் பொருளின் அட்ச ரேகை, தீர்க்க ரேகைகளை எப்படிக் குறிக்கிறார்? இப்படி பல பதிலில்லாத கேள்விகள்.

அருணாச்சலப் பிரதேசத்தில் இயங்குவதாகச் சொல்லப்படும் ஆயுதக் குழுக்கள் பற்றிய காட்சிகள் பெரும் நகைப்பிற்குரியவை. அந்தப் பிரதேசத்தின் சில பகுதிகளை வடஇந்தியர்களும் சில பகுதிகளை தென்னிந்தியர்களும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று போகிறபோக்கில் அடித்துவிடுகிறார்கள்.

பிறகு, இந்தியானா ஜோன்ஸ், மம்மி திரைப்படங்களில் வருவது போன்ற 2ஆம் உலகப் போர் கால விமானத்தில் பயணம் செய்கிறார்கள். அந்தப் படங்களில் வருவதைப் போலவே, அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி, வெடிக்கிறது. எல்லோரும் காயமின்றி தப்பிவிடுகிறார்கள்.

படத்தின் துவக்கத்தில் கதாநாயகியைப் போல ஒருவர் சில காட்சிகளில் வருகிறார். பிறகு கதை அருணாச்சலப் பிரதேசத்திற்கு நகர்ந்த பிறகு, அங்கு ஒருவர் வருகிறார். அவர் கதாநாயகனைக் காதலித்திருக்கிறார் என்பதே படம் முடியும் தருணத்தில்தான் தெரியவருகிறது.

இது தவிர, படத்தில் நாய் ஒன்று எதையோ கண்டுபிடிக்கப்போவதைப் போல அங்கும் இங்கும் ஓடிக்கொண்டேயிருக்கிறது. ஆனால், எதையும் கண்டுபிடிப்பதில்லை. படம் முழுக்க வில்லனாகத் தென்பட்டவர், இறுதியில் நல்லவராம். பிறகு, எதற்கு படம் முழுக்க பேராசிரியர் குழுவைப் பார்த்து எந்திரத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டேயிருக்கிறார் என்று தெரியவில்லை. இதற்கு நடுவில் எம்.எஸ். பாஸ்கர் காமெடி என்ற பெயரில் செய்யும் சேட்டைகள் வேறு.

இதெல்லாம் போக, மிக மோசமான பின்னணி இசை, பாடல்கள் என பொறுமையை பெரிதும் சோதிக்கிறது இந்தப் படம்