இந்திய பெண் முதன்முறையாக இந்திய பெண் நியூசிலாந்தின் அமைச்சராகிறார் !!

நியூசிலாந்து நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண், அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து நாட்டில் பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்தில் புதிதாக 5 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களில் ஒருவர் இந்திய வம்சாவளி பெண் பிரியங்கா ராதாகிருஷ்ணன், 41. இவர் சென்னையில் பிறந்து சிங்கப்பூரில் படித்து வளர்ந்தவர். இவரது பூர்வீகம் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பரவூர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் படித்து பின்னர் நியூசிலாந்தில் குடிபெயர்ந்த இவர், வெலிங்டனில் உள்ள விக்டோரியா பல்கலை.,யில் இளங்கலை பட்டமும், வளர்ச்சி ஆய்வுகளில் முதுகலை பட்டமும் பெற்றார். படிப்பு முடித்த பின்னர் ஆக்லாந்தில் சமூக சேவகராக இந்திய மக்களிடையே செயல்பட்டு வந்தார். 2006ல் இவர் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார். 2014ல் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

2017ல் எம்பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2019ல் பிரியங்கா ராதாகிருஷ்ணன் இன விவகாரங்களுக்கான நாடாளுமன்ற தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவின் அமைச்சரவையில் இவர் சமூக நலம், இளைஞர் நலம் மற்றும் தன்னார்வ துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர தொழில் துறையின் இணை அமைச்சர் பொறுப்பும் இவருக்குக் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் வரலாற்றில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.