இந்திய பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் போட்டோ பதிவிட்ட பாக்., பாடகி

இந்திய பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் போட்டோ பதிவிட்ட பாக்., பாடகியை டுவிட்டரில், இந்திய நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

பாக்.,நாட்டு பாடகியான ரபி பிர்சதா (Rabi Pirzada) என்பவர் தனது உடல் முழுவதும் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தற்கொலைப்படை தாக்குதலுக்கு தயாராக இருப்பது போன்ற போட்டோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், மோடியை ஹிட்லர் என விமர்சித்து கருத்து பதிவிட்டிருந்தார். இவர் இதனை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே, இந்திய இணையதள பயன்பாட்டாளர்கள் அவரை கிண்டல் செய்து சரமாரியாக கருத்து பதிவிட துவங்கினர்.

இதில் ஒருவர், இது பாக்.,கின் தேசிய உடை என்றும், மற்றொருவர் பயங்கரவாதத்திற்கு பாக்., முழு ஆதரவு அளிப்பது இதில் வெட்ட வெளிச்சமாகி உள்ளது எனவும் கருத்து பதிவிட்டுள்ளனர். மேலும் ஒருவர், பாக்.,ன் பாரம்பரிய உடையில் அற்புதமாக உள்ளீர்கள் எனவும், பாக்., பிரதமர் இம்ரான் கான் இதனை தேசிய உடையாக அறிவிக்கலாம் என கேட்டுள்ளார்.

இது போன்ற சர்ச்சைக்குரிய வகையில் போட்டோ பதிவிடுவது பிர்சதாவிற்கு இது புதிதல்ல. இதற்கு முன் செப்., மாதம், ஏராளமான பாம்புகளுடன் இருப்பது போன்ற வீடியோவை பதிவிட்ட பிர்சதா, இதே போன்று காஷ்மீர் விவகாரத்தில் முடிவு எடுத்த மோடியை தாக்க தங்கள் மண்ணில் பலர் தயாராக உள்ளதாகவும் மிரட்டி இருந்தார். இதைக் கண்டித்தும் பலர் கருத்து பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.