இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் இன்று சந்தித்து கலந்துரையாடல்

இலங்கை மீதான பயங்கரவாதத் தாக்குதலினால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு மத்தியில் தனது நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டது, இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாக உலகிற்கு வழங்கிய நற்செய்தி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் நரேந்திர மோதியிடம் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமராக இரண்டாவது முறையாக பதவி பிரமாணம் செய்து கொண்ட நரேந்திர மோதி, தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக மாலத்தீவிற்கு நேற்றைய தினம் சென்று, இலங்கைக்கு இன்று அடுத்த கட்டமாக விஜயம் மேற்கொண்டிருந்தார்.

சுமார் ஐந்து மணி நேரம் இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று முற்பகல் 11 மணியளவில் வருகைத் தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதியை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றிருந்தார்.

இந்த நிலையில், கடும் பாதுகாப்புக்கு மத்தயில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி கொழும்பை நோக்கி வருகைத் தந்தார்.

இலங்கை விஜயத்தின் முதலாவது சந்தர்ப்பமாக, ஏப்ரல் 21ஆம் தேதி பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு சென்று, பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த மக்களுக்கு தனது அஞ்சலியை செலுத்தினார்.

இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸ, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்றார்.

ராணுவ அணிவகுப்பு மரியாதை இந்திய பிரதமருக்கு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

பிரதமர் நரேந்திர மோதியின் இந்த விஜயத்தின் ஊடாக அயல் நாடான இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான நம்பிக்கை மற்றும் நட்புறவு மேலும் வலுவடைந்துள்ளதாக ஜனாதிபதி, இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய பிரதமரின் இந்த விஜயத்தின் ஊடாக, இலங்கையின் பொருளாதார, வர்த்தக, சுற்றுலா துறைகளின் வளர்ச்சியை சாதகமாக மாற்ற முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோதி, இக்கட்டான சூழ்நிலைகளில் அயல் நட்பு நாடுகளுக்கு உறுதுணையாக இருப்பது தனது கடமையாகும் என கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

பயங்கரவாதத்தை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்புக்களை மேம்படுத்த வேண்டும் என இரு நாட்டு தலைவர்களும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது அரசத் தலைவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியாவார்.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் இலங்கை எதிர்நோக்கியுள்ள நிலைமை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நட்பு ரீதியில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மேலும் சிலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

இலங்கையில் நரேந்திர மோதி – ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர்
இலங்கை தேசிய புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி பதவி விலகல்: சிறிசேனா காரணமா?
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் இன்று சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைகலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட சிலர் இதில் கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்திய பிரதமருடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு சுமார் 15 நிமிடங்கள் மாத்திரமே வழங்கப்பட்ட நிலையில், தமது உரிய கலந்துரையாடல்களை நடத்துவதற்கு இது போதுமான காலமாக அமையவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் பிரச்சினை குறித்து விரிவாக கலந்துரையாட வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும், தமக்கு அதற்கான சந்தர்ப்பத்தை புதுடெல்லியில் ஏற்படுத்தி தருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தான் விரைவில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உறுதியளித்ததாகஅக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்த நிலையில், தனது இலங்கை விஜயத்தை நிறைவு செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையிலிருந்து மாலை 4 மணியளவில் இந்தியா நோக்கி புறப்பட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.