இந்திய தடுப்பூசி நிறுவனங்களுக்கு வெளிநாட்டு கம்பனிகள் படையெடுப்பு !!

ஐதராபாதில் கொரோனா தடுப்பூசி பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை வெளிநாடுகளின் துாதுக்குழுவினர் நேற்று பார்வையிட்டனர்.

கொரோனா தடுப்பூசி உருவாக்கும் பணியில் நம் நாட்டின் சில நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இவற்றில் சிலவற்றின் தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை நிறைவு செய்யும் நிலையில் உள்ளன.இந்த நிறுவனங்களின் பணிகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் பல்வேறு நாடுகளின் துாதர்கள் குழுவின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு கடந்த மாதம் விளக்கப்பட்டது.இதையடுத்து பல்வேறு நாடுகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட துாதர்கள் குழுவினர் நேற்று தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் வந்தனர்.

அங்கு கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ள முன்னணி உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களான ‘பாரத் பயோடெக்’ மற்றும் ‘பயாலஜிகல் இ’ ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டனர். பாரத் பயோடெக் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணா கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விளக்கம் அளித்தார்.

உலகில் உள்ள ஒட்டுமொத்த தடுப்பூசிகளில் 33 சதவீதம் ஐதராபாதிலேயே தயாரிக்கப்படுகிறது’ என அவர் கூறினர்.’ஐதராபாதை தொடர்ந்து இந்த குழுவினர் மேலும் சில நகரங்களில் தடுப்பூசி பணிகளை பார்வையிடுவர்’ என வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தன் ‘டுவிட்டர்’ பதிவில்கூறியுள்ளார்.