இந்திய அணி கேப்டன் ரோகித் சதம் அடித்தார்: இந்தியா வெற்றி; தொடரை கைப்பற்றி அசத்தல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ‘டுவென்டி-20’ போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சதம் அடித்தார். இவரது விளாசல் கைகொடுக்க இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது ‘டுவென்டி-20’ லக்னோவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கார்லோஸ் பிராத்வைட் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் உமேஷ் யாதவுக்கு பதிலாக புவனேஷ்வர் இடம் பிடித்தார்.

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித், ஷிகர் தவான் ஜோடி ‘சூப்பர்’ துவக்கம் தந்தது. தாமஸ் பந்துவீச்சில் தவான் இரண்டு பவுண்டரி விளாசினார். பிராத்வைட் வீசிய 9வது ஓவரில் ரோகித் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். தவான் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷாப் (5) நிலைக்கவில்லை. கடைசி ஓவரில் மிரட்டிய ரோகித் தொடர்ந்து இரண்டு பவுண்டரி அடித்து, சதம் எட்டினார். முடிவில், இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது. ரோகித் (111), லோகேஷ் ராகுல் (26) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கலீல் அகமது நெருக்கடி கொடுத்தார். இவரது ‘வேகத்தில்’ ஹோப் (6), ஹெட்மயர் (15) சிக்கினர். ராம்தின் 10 ரன்கள் மட்டும் எடுத்தார். குல்தீப் ‘சுழல்’ வலையில் டேரன் பிராவோ (23), நிக்கோலஸ் (4) அவுட்டாகினர். போலார்டு (6) ஒற்றை இலக்கில் திரும்பினார். முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்து வீழ்ந்தது. பிராத்வைட் (15), தாமஸ் (8) அவுட்டாகாமல் இருந்தனர். இதனையடுத்து, ஒரு போட்டி மீதம் உள்ள நிலையில் இந்திய அணி தொடரை 2-0 என கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி 11ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது.

சர்வதேச ‘டுவென்டி-20’ அரங்கில் அதிக சதம் அடித்து சாதனை படைத்தார் இந்திய வீரர் ரோகித் சர்மா. நேற்று 111 ரன்கள் விளாசிய இவர் நான்காவது சதம் (106, 118, 100, 111 ரன்கள்) அடித்து அசத்தினார். நியூசிலாந்தின் கோலின் முன்ரோ 3 சதம் அடித்ததே இதற்கு முன் சாதனையாக இருந்தது.