இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமான சேவை தடை நீட்டிப்பு: கனடா அறிவிப்பு

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதேபோன்று பாகிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்றின் 3வது அலை பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இரு நாடுகளிலும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அந்நாடுகளின் பயணிகள் விமான சேவைக்கு வரும் ஜூன் 21 வரை தடையை நீட்டித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பயணிகள் விமான சேவைக்கு 30 நாட்கள் தடை விதித்து கனடா அறிவிப்பு வெளியிட்டது. இந்த தடை உத்தரவு இன்று (22ந்தேதி) முடிவுக்கு வரும் நிலையில் கூடுதலாக 30 நாட்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த தடையுத்தரவு, தனியார் மற்றும் சார்ட்டர் விமானங்களுக்கும் விதிக்கப்படுகிறது. எனினும், சரக்கு விமானங்கள் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளால் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தரையிறங்கும் விமானங்கள் ஆகியவற்றுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.