இந்தியா எடுக்கும் அனைத்தும் நடவடிக்கைகளுக்கும் மிகச் சிறந்த நட்பு நாடு என்ற அடிப்படையில் இஸ்ரேல் ஆதரவு அளிக்கும்

‘பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதுடன் முழு ஒத்துழைப்பையும் அளிக்கத் தயாராக உள்ளோம்’ என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில் பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து ‘பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். ‘மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் பயங்கரவாதத்துக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் போல் நம் ராணுவமும் தாக்குதல்களை நடத்த வேண்டும்’ என சிலர் கருத்து கூறியிருந்தனர்.

இந்நிலையில் இந்தியாவுக்கான இஸ்ரேலின் துாதராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் முன்னாள் ராணுவ அதிகாரியான ரான் மால்கா கூறியதாவது: பயங்கரவாதத்துக்கு எதிராக மிகவும் துல்லியமாகவும், விரைவாகவும் இஸ்ரேல் எடுத்த நடவடிக்கைகள் உலகெங்கும் பாராட்டை பெற்றன. பயங்கரவாதம் என்பது இந்தியா, இஸ்ரேலின் பிரச்னை மட்டுமல்ல; உலகளாவிய பிரச்னை. இந்தப் பிரச்னையில் உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

தன் நாட்டைப் பாதுகாக்கவும் பயங்கரவாதத்துக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது. இவ்வாறு இந்தியா எடுக்கும் அனைத்தும் நடவடிக்கைகளுக்கும் மிகச் சிறந்த நட்பு நாடு என்ற அடிப்படையில் இஸ்ரேல் ஆதரவு அளிக்கும். தேவைப்பட்டால் முழு ஒத்துழைப்பையும் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.