இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 42 ஆண்டுகால வர்த்தக சலுகை ரத்து – டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சுங்கவரி விதிப்பின்றி பல பில்லியன்கணக்கான அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை நிறுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதால் இந்தியா மீது அந்நாட்டு அதிபர் கோபம் கொண்டுள்ளார். மேலும் இந்தியாவின் சிறப்பு வர்த்தக நாடு என்ற அந்தஸ்தையும் அவர் ரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் மதுபானங்கள், ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு இந்தியா 100 முதல் 150 சதவீதம் வரை கடுமையான வரி விதிப்பதாக அண்மையில் டிரம்ப் புகார் கூறியிருந்தார்.

இருநாடுகள் இடையில் இறக்குமதி, ஏற்றுமதி வரி வேறுபாட்டால் அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று விமர்சித்திருந்தார். இதன் அடுத்த நடவடிக்கையாக இந்தியாவின் சிறப்பு வர்த்தக நாடு என்பதை ரத்து செய்துள்ளது. இந்தியா பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நாடு என்ற சிறப்பு அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்யும் எனவும் எச்சரித்துள்ளது. துருக்கிக்கும் அமெரிக்கா சில வர்த்தக தடைகளை நிறைவேற்றியுள்ளது.

அமெரிக்க எம்பிக்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், இந்திய சந்தையில் அமெரிக்க பொருட்களுக்கு நியாயமான வர்த்தகம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் ஜிஎஸ்பி புரோகிராம் என்ற வளரும் நாடுகளுக்கான சிறப்பு வர்த்தக சலுகைகளை நிறுத்தப் போவது குறித்து இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அமெரிக்க பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பது குறித்து இந்தியா எந்தவிதமான உறுதிமொழியையும் அளிக்கவில்லை என்று டிரம்ப் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வாஷிங்டனில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் இந்தியா மற்றும் துருக்கிக்கான சிறப்பு வர்த்தக தகுதியை நிறுத்த முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் சுமார் 5 .6 பில்லியன் டாலர் மதிப்புடைய பொருட்களுக்கான வரிச்சலுகைகள் ரத்தாக கூடும்.