இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயில்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு மத்திய அரசு சிறப்பு விருது

தூய்மை இந்தியா என்ற ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இந்தியாவிலேயே சிறந்த தூய்மையான கோயில் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை மத்திய அரசிடமிருந்து மதுரை நகராட்சி பெறவுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தூய்மை இந்தியா சிறந்த கோயிலுக்கான தேர்வு தொடங்கப்பட்டு 10 இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டன. இதில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வாகியுள்ளது.

நாளை (அக்டோபர் 2, 2017) மதுரை மாவட்ட ஆட்சியர் கே.வீர ராகவ ராவ், நகராட்சி ஆணையர் எஸ்.அனீஷ் சேகர் ஆகியோர் மத்திய அமைச்சர் உமா பாரதியிடமிருந்து விருதைப் பெறுகின்றனர்.

இது குறித்து அனீஷ் சேகர் கூறும்போது, முதலில் கோயிலின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வது என்ற கவனத்தில் தொடங்கப்பட்டது, இது அதன் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது மார்ச் 2018-ல் இதன் பணி முழுதும் நிறைவடையும் என்றார். இதற்கான செலவு ரூ.11.65 கோடி, இதற்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறது. “மற்ற 10 தூய்மை சிறந்த இடங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை தேர்வு செய்தது எங்களுக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது” என்றார்.

சித்திரைத் தெருக்களில் ஒவ்வொரு 50மீ இடைவெளியிலும் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் குப்பை எடுக்கும் லாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு உடனுக்குடன் குப்பைத் தொட்டிகளிலிருந்து குப்பைகளை அள்ளிச் செல்கிறது. 25 இ-டாய்லெட்கள், சுற்றுலாப்பயணிகளுக்கு முழுநேர குடிநீர் வசதி. சாலைகளைச் சுத்தம் செய்ய பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

கோயிலைச் சுற்றி உள்ள தெருக்களில் 2018 மார்ச் மாதம் சுத்தமாக பிளாஸ்டிக் குப்பைகள் இருக்காது என்கிறார் ஆணையர். இந்த விருது அறிவிப்பினால் கோயிலைச் சுற்றியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர், சாலைகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற தாங்களும் முழு முயற்சியில் பணியாற்றியதாக அவர்கள் தெரிவித்தனர்.