இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அமர்நாத் யாத்திரை மேற்கொள்வார்

இந்தியாவின் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக காஷ்மீர் மாநிலம் செல்கிறார் அமித்ஷா. இந்த பயணத்தில் அவர் அமர்நாத் புனித யாத்திரையும் மேற்கொள்ள உள்ளார்.

பிரதமர் மேடி, உள்நாட்டு பாதுகாப்பு முழுமையும் கையாளும் வகையில் அமித்ஷாவிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். இதனால் தான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகள் அனைவரையும் அமித்ஷாவிடமே அறிக்கை அளிக்க செய்துள்ளார். எனவே, 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள பா.ஜ., அரசு, அமித்ஷா தலைமையில் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த விரும்புகிறது.

இதன் ஒரு பகுதியாகத்தான், வரும் ஜூன் 26 மற்றும் 27 காஷ்மீருக்கும், அதே பயணத்தில் அமர்நாத்திற்கும் செல்கிறார். இதன் ஒரு பகுதியாக ஸ்ரீநகரில் பாதுகாப்பு அதிகாரிகளின் உயர்மட்ட கூட்டத்தில் காஷ்மீரின் பாதுகாப்பு குறித்தும், அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்கிறார் அமித்ஷா.உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்ற முதல் நான்கு நாட்களிலேயே காஷ்மீர் குறித்த அவரது அதிரடி நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்பட்டன.

இந்த பயணத்திலேயே அமர்நாத் யாத்திரையம் அமித்ஷா மேற்கொள்கிறார். அங்குள்ள புனிதக் குகையில் பனி லிங்கத்தை வணங்குகிறார். பின்னர், யாத்ரிகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உயர் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிடுகிறார். ஏனெனில், இந்தமுறை யாத்திரை எந்த தடையும் இல்லாமல் நடைபெறவேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
இந்தாண்டு அமர்நாத் புனித குகை்கு சுமார் 3 லட்சம் யாத்ரீகர்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு துணை ராணுவம், காஷ்மீர் போலீசார், ஆயுதப்படை போலீசார் உள்ளிட்ட 45 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பாரம்பரியமாக அமர்நாத் செல்லும் அனந்தநாக் மாவட்டத்தின் பஹல்காம் வழி மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள குறுகிய பால்டால் வழிகளில் 46 நாட்கள் அமர்நாத் யாத்திரை நடக்கும். கடந்த 2017, ஜூலை 10 ல் காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 பக்தர்கள் பலியாகினர். 19 பேர் படுகாயமடைந்தனர்.

எனவே தான், அமித்ஷா ராணுவ உயர் அதிகாரிகள், மாநிலத்தின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள், துணை ராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளின் கூட்டத்தை நடத்துகிறார்.

அமித்ஷாவின் அமர்நாத் யாத்திரை நடக்கும் அதே நேரத்தில், ஹூரியத் தலைவர்கள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்துள்ளனர் என்பது முக்கியமானது. இந்த பேச்சுவார்த்தை காஷ்மீர் பிரச்னையில் ஒரு முறிப்பை ஏற்படுத்தும். அமித்ஷாவின் பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்புகளுக்கு பின்னர், பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணி தீவிரமடையலாம். இந்த ஆண்டில் இதுவரை பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 120க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு படையின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீரின் சில பகுதிகளில், குறிப்பாக தெற்கு காஷ்மீரில் தான் எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை ஒடுக்க வேண்டியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையமும் கூட அமர்நாத் யாத்திரை ஆக.15ல் முடிவுக்கு வந்த பின்னர் தான், காஷ்மீர் தேர்தல் குறித்து பரிசீலிக்க உள்ளது.