இந்தியப் பிரதமரும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திப்பு

சீன அதிபர் சென்னை மாமல்லபுரம் வருவது உறுதியான பின்னும், மத்திய அரசு இது குறித்து அலுவல் பூர்வமாக ஏதும் தெரிவிக்காமலிருந்தது. ஆனால், அதே நேரம் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு மாமல்லபுரம் சென்று ஆய்வு செய்தது.

இப்படியான சூழலில் இந்தியப் பிரதமரும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திப்பதை வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது .

இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையை இந்தியா நீக்கியவுடன் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச கவனத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் ஐ.நா. சபையில் எழுப்பியது சீனா. பாகிஸ்தான் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் அது அமைந்திருந்தது. ஆனால், தற்போது சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வந்து மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமருடன் பேச்சு நடத்தவுள்ள நிலையில் காஷ்மீர் தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது சீனா.

காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் – பாகிஸ்தானும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

சீனா சென்ற பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் முன்னிலையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் “காஷ்மீர் தொடர்பான சீனாவின் நிலைப்பாடு தொடர்ச்சியானது. தெளிவானது. இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தவேண்டும். பரஸ்பர நம்பிக்கையை உறுதிப்படுத்தவேண்டும். இரு நாடுகளின் நலன் கருதியும், உலகத்தின் விருப்பம் கருதியுமே இந்த நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.

ஆனால், சமீபத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக ஐ.நா.வில் பிரச்சனையை கிளப்பியது சீனா.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு பயணம் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சீன அதிபரைச் சந்தித்தார். அப்போது இந்தியா வர ஷி ஜின்-பிங்குக்கு அழைப்பு விடுத்தார் மோதி.

இந்த அழைப்பை ஏற்று இந்தியா வரும் ஜின் பிங், அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய இருநாட்கள் சென்னைக்கு வருகிறார்.

மாமல்லபுரத்தில் இருநாட்டுத் தலைவர்களும் சந்திக்கிறார்கள். இது நட்புமுறையிலான சந்திப்பாகும்.

இந்த சந்திப்பில் இந்தியா சீன எல்லை பிரச்சனை குறித்துப் பேசப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பிரதமரையும், சீன அதிபரையும் வரவேற்று பேனர்களை வைக்க அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.

தமிழ்நாட்டில் ஃப்ளக்ஸ், பேனர்கள் வைக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. சில நாட்களுக்கு முன்பாக, சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் செல்லும்போது, சாலையின் நடுவில் கட்டப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இறந்தார்.

அந்த நிகழ்வுக்குப் பிறகு அரசியல் கட்சிகள் அனைத்தும் பேனர்கள் வைக்கக்கூடாது என தம் தொண்டர்களுக்கு கட்டளையிட்டன. பேனர்கள் வைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளும் அனுமதி தருவதையும் நிறுத்தின.
படத்தின் காப்புரிமை ARUN SANKAR

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் பிராமணப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பேனர்கள் வைக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படாதது குறித்துச் சுட்டிக்காட்டியிருக்கும் அந்த பிரமாணப் பத்திரத்தில், வரும் அக்டோபர் 11-12ஆம் தேதிகளில் இந்தியப் பிரதமரும் வெளிநாடு ஒன்றின் தலைவரும் இருதரப்புப் பேச்சுவார்த்தைக்காக சென்னைக்கு வரவிருக்கிறார்கள்; அந்தத் தருணத்தில் வெளியுறவுத் துறை அவர்களை வரவேற்று பேனர்கள் வைப்பது வழக்கமான நடவடிக்கை என்பது சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.

மேலும் இந்தத் தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை தருவதால், தமிழக அரசின் சார்பிலும் அவர்களை வரவேற்று குறிப்பிட்ட இடங்களில் பேனர் வைக்க வேண்டும்; இந்த பேனர்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடங்களில் ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் அடிப்படையில் பொதுமக்களுக்கு தொந்தரவில்லாத வகையில் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

வெளியுறவுத் துறை அமைச்சகத்தைப் பொறுத்தவரை சென்னையில் 14 இடங்களிலும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒன்பது இடங்களிலும் மாமல்லபுரத்தில் இரண்டு இடங்களிலும் பேனர்கள் வைக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசைப் பொறுத்தவரை சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை மொத்தம் 16 இடங்களில் வரவேற்பு பேனர்களை வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பேனர்கள் அக்டோபர் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதிவரை ஐந்து நாட்களுக்கு வைக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்படுத்தப்பட்டுவருகின்றன. 16.5 சதுர கி.மீ. பரப்புள்ள அந்த ஊர் முழுவதும் சாலைகள் சீரமைக்கப்பட்டுவருகின்றன. அந்த ஊரில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளில் தங்குபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. கடலில் அலைச்சறுக்கு விளையாட்டிற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் 4ஆம் தேதியிலிருந்தே கடலுக்குச் செல்ல வேண்டாமெனக் கூறப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.