இங்கிலாந்து பவுலர்களுக்கு கோலி பாராட்டு

கான்பூர் :

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று நடந்த இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘எங்களை விட இங்கிலாந்து வீரர்கள் எல்லா வகையிலும் சிறப்பாக ஆடினர் என்பதை ஒப்புக்கொள்கிறேன். பந்து வீச்சு, பீல்டிங், பேட்டிங் அனைத்திலும் அபாரமாக செயல்பட்டனர். வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். எதிரணி நன்றாக ஆடும் போது எழுந்து நின்று பாராட்ட வேண்டும். அப்படி தான் இங்கிலாந்தின் ஆட்டம் அமைந்தது. கடின முனைப்புடன் கொஞ்சம் பவுன்சாக சரியான அளவில் பந்து வீசிய இங்கிலாந்து பவுலர்களுக்கே ஒட்டுமொத்த சிறப்பும் உரித்தானது. இந்த ஆடுகளத்தில் 30 முதல் 35 ரன்கள் குறைவாக எடுத்து விட்டதாக நினைக்கிறேன். தவறுகளில் இருந்து வீரர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார்.

தொடக்க ஆட்டக்காரராக ஆடியது குறித்து கோலியிடம் கேட்ட போது, ‘நான் தொடக்க ஆட்டக்காரராக இறங்கியதால், பேட்டிங் வரிசையை மேலும் சமப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதாவது மிடில் வரிசையில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்க முடிந்தது. சூழ்நிலையை பொறுத்து அடுத்த ஆட்டத்தில் தொடக்க வீரராக ஆடுவது குறித்து முடிவு செய்வேன். ரோகித் சர்மா இருந்திருந்தால் ராகுலுடன் தொடக்க வீரராக இறங்கியிருப்பார். அப்போது இந்த கேள்வியே எழுந்திருக்காது.’ என்றார்.

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் 20 ஓவர் போட்டியில் இதுவரை 1,511 ரன்கள் சேர்த்துள்ளார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் 1,500 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர், ஒட்டுமொத்தத்தில் 12-வது வீரர் மோர்கன் ஆவார். வெற்றிக்கு பிறகு அவர் கூறுகையில், ‘எங்களது பந்து வீச்சு அற்புதமாக இருந்தது. ஒவ்வொருவரும் தங்களது திட்டத்தை களத்தில் கச்சிதமாக நிறைவேற்றினர். குறிப்பாக ஆடுகளத்தில் பந்து அதிகமாக சுழன்று திரும்பாத போதிலும் மொயீன் அலி, அதற்கு ஏற்ப சிறப்பாக பந்து வீசியதை பார்க்க முடிந்தது’ என்றார்.